×

சென்னையில் தண்ணீர் பஞ்சம் எதிரொலி,.. சிறுகுறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி பாதிப்பு,.. பெரிய தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடல்

சென்னை:  பருவமழை பொய்த்ததன் காரணமாகவும், மற்றும் சரியான திட்டமிடல் இல்லாததால் கடந்த 2 மாதங்களாக சென்னையில் வரலாறு காணாத அளவிற்கு கடும் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டு போன நிலையில் விவசாய கிணறு, கடல்நீரை குடிநீராக்கும் நிலையம், கல்குவாரி, வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் போதுமானதாக இல்லை. இதனால், சென்னையில் பல இடங்களில் ஒரு குடும்பத்திற்கு 2 குடம் என்று லாரிகளில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் 3 நாட்களுக்கு ஒரு முறை தான் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நிலத்தடி நீர் மட்டமும் முற்றிலும் சரிந்து விட்டதால், போர்வெல் மூலம் தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், மற்ற தேவைகளுக்கு தண்ணீரின்றி தவிக்கின்றனர். குறிப்பாக, பல் துலக்க, கழிப்பறைக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போர் வீட்டை காலி செய்து வருகின்றனர். இந்த நிலையில் பலர் குடிநீர் பிரச்சனை காரணமாக தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் தண்ணீர் பிரச்சனை காரணமாக ஆயிரக்கணக்கான தனியார் அலுவலகங்களிலும் விடுமுறை விடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய தங்களது ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

சில அலுவலகங்கள் தண்ணீர் பிரச்சனையை காரணம் காட்டி அலுவலகத்தை வெளி மாநிலங்களுக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. இதனால், ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே போன்று சென்னையை ஓட்டி அமைந்துள்ள கார் தொழிற்சாலை, பெயிண்ட்  தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு முறையாக தண்ணீர் தர முடியவில்ைல. குறிப்பாக, கார் தொழிற்சாலைகளுக்கு லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.  தற்போது, குடிப்பதற்கே இங்கு தண்ணீர் இல்லாத நிலையில்  தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் தர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், தொழிற்சாலைகளில் தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்தி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஊழியர்கள் வேலையின்றி வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில், சிறுகுறு தொழில் நிறுவனங்களும் மறைமுகமாக தண்ணீர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளது. சிறுகுறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி குறைந்து போய் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு சிறு குறு தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பு தலைவர் அன்புராஜ் கூறும் போது, ‘‘சென்னையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.

இதில், சிறு நிறுவனங்களில் 3 பேர் வரை வேலை செய்கின்றனர். குறு நிறுவனங்களில் 15 பேருக்கு மேல் வேலை செய்கின்றனர். பெரிய நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்கின்றனர். இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குடிநீர் பிரச்சனை இருப்பதால் அவர்களால் வேலைக்கு வரமுடிவதில்லை. இதனால், சிறு, குறு நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜிஎஸ்டி வரி அமல் காரணமாக 50 ஆயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. ஆனால், தண்ணீர் பிரச்சனையால் மூடும் அளவிற்கு பிரச்சனை இல்லை. இருப்பினும் சிறுகுறு நிறுவனங்கள் இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.


Tags : Chennai ,closure , Chennai, water famine, small industry, large industries, closures
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...