தி.மலையில் விடியவிடிய கிரிவலம் சென்னை செல்ல பஸ்கள் இல்லை பக்தர்கள்சாலை மறியல்

திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ்கள் கிடைக்காததால் இன்று அதிகாலை சாலைமறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். இந்த மாத பவுர்ணமி கிரிவலம் நேற்று பிற்பகல் 3.10 மணிக்கு தொடங்கியது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேரம் ஆகஆக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இரவு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
மேலும், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.  இன்று பிற்பகல் 3மணிக்கு பவுர்ணமி நிறைவடைவதால் 2வது நாளாக இன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. அதேபோல், வேலூர், விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயிலை தென்னக ரயில்வே இயக்கியது.ஆனால் கிரிவலம் முடித்த பக்தர்கள் மீண்டும் தங்களது ஊர்களுக்கு செல்ல போதிய பஸ்கள் கிடைக்காததால் பஸ் நிலையங்களில் இரவு முழுவதும் காத்துக்கிடந்தனர். ஒருசில பஸ்கள் வந்தபோது அதில் இடம்பிடிக்க முண்டியடித்து ஏறியதால், பக்தர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பஸ் நிலையத்தில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். ஆனால் சென்னை மற்றும் புதுச்சேரிக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த பக்தர்கள் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூடுதலாக பஸ்களை ஏற்பாடு செய்தனர். பக்தர்கள், மறியலை கைவிட்டு தங்களது ஊர்களுக்கு சென்றனர்.

× RELATED சென்னை கிரைம்