சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை அம்மா குடிநீருக்கே தட்டுப்பாடு : பஸ் பயணிகள் அவதி

ஈரோடு: சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னையால், அம்மா குடிநீர் பாட்டில்களுக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அனைத்து மாவட்டத்திற்கும் பெயரளவுக்கு மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது.  தமிழகத்தில் பஸ் பயணிகள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், தனியார் வாட்டர் கேன் விற்பனையை முறியடிக்கும் வகையில் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சார்பில் ‘அம்மா குடிநீர்’ திட்டம் துவங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இருந்து தினமும் குடிநீர் பாட்டில் உற்பத்தி செய்து, அரசு பஸ்கள் மூலம் தமிழகத்தில் உள்ள 268 பஸ் ஸ்டாண்ட்டுகளுக்கும் அனுப்பப்படுகிறது.

தனியார் வாட்டர் பாட்டில்கள் ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அரசு குடிநீர் பாட்டில் ஒரு லிட்டர் ரூ.10க்கு மலிவாக விற்பனை செய்வதால் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை பிரச்னையால், அம்மா குடிநீர் பாட்டில் உற்பத்தியும் பாதியாக குறைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுக்க அரசு குடிநீர் பாட்டில்களை பெயரளவுக்கே விநியோகம் செய்து வருகின்றனர். குறிப்பாக ஈரோடு பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் அரசு விரைவு போக்குவரத்து பஸ் மூலம் 60 முதல் 80 பெட்டிகள் (பெட்டிக்கு 12 பாட்டில்) என சராசரியாக 780 பாட்டில்கள் சப்ளை செய்யப்பட்டு வந்தன. ஆனால் சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னையால், ஈரோடு பஸ் ஸ்டாண்டிற்கு அனுப்பப்பட்டு வரும் அரசு குடிநீர் பாட்டில்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது 20 பெட்டிகளை அனுப்பப்படுகிறது.

இந்த குடிநீர் பாட்டில்கள் விற்பனையகம் திறக்கப்பட்ட சில மணி துளிகளில் விற்று தீர்ந்து விடுகின்றன. இதனால் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் உள்ள அரசு குடிநீர் விற்பனையகத்தில் எந்நேரமும் தண்ணீர் தீர்ந்து விட்டது என்ற அறிவிப்பு பலகை தொங்கி கொண்டிருக்கிறது.இதுகுறித்து ஈரோடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் கூறுகையில், ஈரோடு மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதேநிலை தான் உள்ளது என்றார்.

Related Stories: