62 வகையான மாம்பழங்களுடன் மாங்கனி கண்காட்சி துவங்கியது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நேற்று மாலை தொடங்கியது. மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆவின் தலைவர் அன்பழகன் முன்னிலை வகித்தார். பர்கூர் எம்எல்ஏ ராஜேந்திரன் கண்காட்சியை திறந்து வைத்தார். தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கண்ணன் திட்ட விளக்கவுரையாற்றினர். இந்த கண்காட்சியில் மா போட்டி அரங்கில், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என மொத்தம் 250 விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் விளைந்த மாங்கனிகளை காட்சிக்காக வைத்துள்ளனர்.

அதன்படி அல்போன்சா, சிந்து, ரத்னா, மல்லிகா, பெங்களூரா, சேலம் பெங்களூரா, இமாம்சந்த், காதர், பங்கனப்பள்ளி, மல்கோவா, நீலம் உள்பட 40 வகையான மா ரகங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகம், ஆந்திரா மாநில அரசு பண்ணைகளில் விளைவிக்கப்பட்ட 22 ரக மா வகைகளும்
இடம்பெற்றுள்ளன. இங்கு தோட்டக்கலைத்துறை சார்பில் பார்வையாளர்கள் கவரும் வகையில் 65 ஆயிரம் மலர்கள் கொண்டு மாம்பழம், பென்குயின், கிரிக்கெட் உலக கோப்பை ஆகியவை வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஏலக்காய், கிராம்பு, மிளகு, வெந்தயம், சோம்பு, பட்டை, சீரகம், ஜாதிக்காய், அன்னாசி பூ, ஜாதிகொட்டய், மிளகாய் விதை, மராட்டி மொக்கு, கசகசா ஆகிய 14 வகையான நறுமண பொருட்களை கொண்டு 600 கிலோ எடையில் நாடாளுமன்ற முகப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை கவர்ந்தது. இந்த கண்காட்சி மொத்தம்
29 நாட்கள் நடக்கிறது.

× RELATED கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய...