கத்திவாக்கம் மேம்பால பகுதியில் மின்வயர் பதிக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் வேண்டுகோள்

திருவொற்றியூர்: சென்னை எண்ணூர் துணைமின் நிலையத்தில் இருந்து ஆல் இந்தியா ரேடியோ நகர் துணை மின் நிலையத்திற்கு வரக்கூடிய மின் கேபிள்கள் 50 ஆண்டுக்கு முன்பு போடப்பட்டது. இதனால் கேபிள்கள் பழுதாகி அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுகிறது. எண்ணூர் துணை மின் நிலையத்தில் இருந்து ஆல் இந்தியா ரேடியோ துணை மின் நிலையத்திற்கு இடையே உள்ள 4 கிமீ தூரத்திற்கு பழுதாகியுள்ள மின் கேபிளை மாற்ற மின்வாரியம் திட்டமிட்டு இதற்கான பணி  கடந்த வாரம் துவங்கியது. இதனால், கேபிள் அமைக்கக்கூடிய பாதையில் 4 மீ ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, பழுதாகியுள்ள மின் கேபிளை மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கத்திவாக்கம் மேம்பாலம் கீழேயுள்ள சர்வீஸ் சாலையில் மின் கேபிள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் கடந்த 6 நாட்களாக அவ்வழியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேம்பாலத்திற்கு மேல் பஸ்,  கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எண்ணூர் அனல்மின் நிலைய ஊழியர்கள் மற்றும் கத்திவாக்கம் மேம்பாலம் கீழேயுள்ள வங்கிக்கு செல்ல வேண்டிய பொதுமக்களும் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு வரவேண்டிய நிலை உள்ளது. எனவே, கத்திவாக்கம் மேம்பாலம் கீழே சர்வீஸ் சாலையில் புதிய மின் கேபிள் பதிக்கும் பணியை காலதாமதமின்றி செய்து முடித்து சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.

Related Stories: