மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிய வழக்கு : உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

டெல்லி : நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

கொல்கத்தாவில் பயிற்சி டாக்டர்கள் மீது தாக்கு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் இறந்தார். இதை கண்டித்து  நோயாளிகளின் உறவினர்களால், இரண்டு பயிற்சி டாக்டர்கள் தாக்கப்பட்டனர். இதைக் கண்டித்து, அந்த மாநிலத்தில் உள்ள டாக்டர்கள், ஸ்டிரைக்கில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் அரசு மருத்துமவனைகளில் உள்ள நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சிகிச்சை கிடைக்காமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

பல்வேறு மாநிலங்களை சேர்ந்த டாக்டர்களும் போராட்டம்

இதையடுத்து, ஸ்டிரைக்கை வாபஸ்பெற்றுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். ஆனால் டாக்டர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அம்மாநில டாக்டர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த டாக்டர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டாக்டர்களுக்கான பணி பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வலியுறுத்தியும், டாக்டர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் இன்று நாடு முழுவதும் அரசு டாக்டர்கள் 24 மணி நேர ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தனியார் மருத்துவமனை டாக்டர்களும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர்.

நாடு தழுவிய போராட்டம்

இந்நிலையில், இன்று காலை 6 மணி முதல் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு பணிக்கு வந்த டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதை தொடர்ந்து பணிகளை புறக்கணித்து மருத்துவமனைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பணியில் இருக்கும் டாக்டர்களை தாக்குபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். அதற்காக நாடு முழுவதும் ஒரே சீரான சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் என்று கோஷமிட்டனர்.

தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் காலை முதல் வெளி நோயாளிகள் சிகிச்சைகளை புறக்கணித்தனர். எமர்ஜென்சி சிகிச்சைகள் மட்டுமே எடுத்து கொள்வதாக தெரிவித்தனர். இருந்தாலும் டாக்டர்கள் பலர் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவித்ததோடு தங்கள் பணிகளை தொடர்ந்தனர்.

 

மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு பணியின் போது பாதுகாப்பு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. பணியின் போது தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: