கன்னியாகுமரியில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பெயரைக் சேர்க்க மீண்டும் விண்ணப்பிக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: கன்னியாகுமரியில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பெயரைக் சேர்க்க மீண்டும் விண்ணப்பிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மீனவர் கூட்டமைப்பு கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், மதுரையைச் சேர்ந்த இளந்தமிழன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் தூத்தூர், சின்னத்துறை, கடியப்பட்டினம், ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி, இடலாக்குடி உள்ளிட்ட கடலோர கிராமங்களில் 45 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் இந்த 45 ஆயிரம் பேரும் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை. எனவே, அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட பகுதிகளில் மறுதேர்தல் நடத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவுக்கு பதில் தருமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கானது நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மக்களவைத் தேர்தலுக்கு முன் 7 முறை வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இடம்பெறவில்லை என எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், 2016 மற்றும் 2019ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை ஒப்பிடுகையில், மனுதாரர் குறிப்பிட்ட கடலோர பகுதியில் 2,138 வாக்குகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் உரிய ஆவணத்துடன் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள், தங்கள் பெயரைக் சேர்க்க வாக்காளர் பதிவு அதிகாரிகளிடம் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்திய நீதிபதிகள், மனுவை முடித்து உத்தரவிட்டனர்.

Related Stories: