கடும் வெயிலுக்கு 184 பேர் உயிரிழப்பு எதிரொலி. பீகாரில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு ; பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு

பாட்னா: வெயில் காரணமாக பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று பீகார் மாநிலம் கயாவில் சட்டப்பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் கடும் வெயிலின் காரணமாக இதுவரை 184க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கடும் வெயிலுக்கு 184 பேர் உயிரிழப்பு

வரலாறு காணாத வெப்பத்தால் தமிழகம் மட்டுமல்ல பல்வேறு வடமாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் வாட்டி வதைக்கும் கடும் வெயிலால் பீகாரில் மட்டும் 184 பேர் உயிரிழந்துள்ளனர். ஹிட்ஸ்ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன. மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தை வியாபித்திருக்கும் கடும் வெப்பம் தார் சாலைகளை கூட உருக்கிவிடுவதாக இருக்கிறது. இதையடுத்து மண்டையை பிளக்கும் வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் அம்மாநிலத்திலும் பலர் மரணம் அடைந்துள்ளனர்.

இதை தொடர்ந்து வறுத்தெடுக்கும் வெப்பம் அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதால் மக்கள் பகல் நேரத்தில் நடமாட்டத்தை தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.  மேலும் பீகாரின் பாட்னா, அவுரங்காபாத், கயா, நவாடா மாவட்டங்களில் வெப்பம் வெளுத்து வாங்கி வருகிறது. சனிக்கிழமை இரவு வரை 44 உயிரிழந்த நிலையில், ஞாயிறன்று வெயில் கொடுமைக்கு பலியானோர் எண்ணிக்கையுடன் சேர்த்து கடந்த இரு நாட்களில் 113 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெப்பத்தால் மயங்கிய பலர் வழியிலேயே இறந்து விட மேலும் பலர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.இந்நிலையில் வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். உத்திரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

பீகாரில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

இந்நிலையில் வெயில் காரணமாக பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று பீகார் மாநிலம் கயாவில் சட்டப்பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு சாராத கட்டுமானப் பணிகளில் ஈடுபட வேண்டாம் என்றும் கலை நிகழ்ச்சிகள் பொதுவெளியில் நடத்த வேண்டாம் என்றும் கயா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பகல் 11 மணி முதல் மாலை 4 வரை ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளையும் மேற்கொள்ள தடை போடப்பட்டுள்ளது. இதனையடுத்து வரும் 30ம் தேதி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெப்பம் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Related Stories: