இரு சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை..: போலீசார் தீவிர விசாரணை

நியூயார்க்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் அயோவா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் டெஸ் மொய்னஸ் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் சுங்காரா(44). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் தனது மனைவி லாவண்யா சுங்காரா(41), 15 மற்றும் 10 வயதுடைய 2 மகன்களுடன் வசித்து வந்தார். பொதுமக்கள் பாதுகாப்பிற்கான தொழில்நுட்ப சேவைகள் பிரிவில் கடந்த 11 ஆண்டுகளாக சந்திரசேகர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்நாட்டு நேரப்படி சனிக்கிழமை இரவு இவர்கள் 4 பேரும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சந்திரசேகரின் வீட்டில் தங்கியிருந்த அவரது உறவினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தினர்.

இறந்து கிடந்த 4 பேரின் உடல்களில் பல துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தது. எனவே அவர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. எனினும், அவர்களின் இறப்புக்கான சரியான காரணத்தை தீர்மானிக்க பிரேத பரிசோதனைகள் செய்யப்படுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களை சுட்டுக் கொன்றது யார்? எதற்காக அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என தெரியவில்லை. எனவே, கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளி குறித்தும் அயோவா குற்றவியல் புலனாய்வுத் துறை மற்றும் வெஸ் டெஸ் மொய்னஸ் நகர் போலீசார் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சந்திரசேகர் ஆந்திரப் மாநிலம் குண்டூர் மாவட்டத்தின் சுந்துரூ கிராமத்தை சேர்ந்தவர் என்றும், உயர்கல்வியைத் தொடர அமெரிக்கா சென்று தனது குடும்பத்தினருடன் அங்கேயே குடியேறியுள்ளார். அவரது பெற்றோர் ஐதராபாத்தில் வசித்து வருவதும் தெரிய வந்துள்ளது.

Related Stories: