வைகை 33 அடியாக சரிந்து, தண்ணீர் காலியாகிறது 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க திட்டம்?

* ஒரு நாள் தேவையோ 300 மில்லியன் லிட்டர், கிடைப்பதோ 170 மி.லி.

மதுரை : மதுரை மாநகரின் ஒரு நாள் குடிநீர் தேவை 300 மில்லியன் லிட்டர், கிடைப்பதோ 170 மில்லியன் லிட்டர் தான். வைகை அணை நீர்மட்டம் 33 அடியாக சரிந்து, தண்ணீர் வேகமாக காலியாகிறது. இதனால் 4 நாட்களுக்கு ஒரு முறை குழாயில் குடிநீர் வழங்கி சமாளிப்பது குறித்து தீவிர பரிசீலனை நடந்து வருகிறது. மதுரை மாநகருக்கு வைகை அணையில் இருந்து தினமும் 115 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைத்து வருகிறது. காவிரி கூட்டுக்குடிநீர் மற்றும் வைகை ஆற்றுப்படுகையிலுள்ள மேலக்கால், மணலூர் ஆகிய இடங்களில் இருந்து கிடைக்கும் குடிநீரையும் பயன்படுத்தி 2 நாட்களுக்கு ஒரு முறை குழாய்களில் சப்ளை செய்யப்படுகிறது.

 ஆனால், தற்போது காவிரி கூட்டுக்குடிநீர் மற்றும் ஆற்றுப்படுகைகளில் இருந்து கிடைக்கும் குடிநீர் அளவு குறைந்து 55 மில்லியன் முதல் 60 மில்லியன் லிட்டர் வரை தான் கிடக்கிறது. எனவே, ஒரு நாளில் 170 மில்லியன் லிட்டர் மட்டுமே கிடைப்பதால் பற்றாக்குறை 130 மில்லியன் லிட்டராக குறைந்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில், வைகை அணை நீர் வேகமாக காலியாகி வருகிறது. நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம் 33 அடியாக சரிந்தது. இதில் 25 அடிக்கு மேல் மண் படிந்துள்ளது. அணையில் 501 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதில் குடிநீருக்காக 50 கனஅடி வீதம் வெளியேற்றப்படுகிறது.

கடும் வெயிலில் ஆவியாவது அதிகரித்து 8 மில்லியன் கன அடி காலியாகிறது. அதாவது தினமும் ஒரு மில்லியன் கன அடிக்கு மேல் ஆவியாகிறது. தற்போது அணையிலுள்ள நீரை வைத்து ஜூன் இறுதிவரை குடிநீர் வழங்க முடியும் என அதிகாரிகள் கருதினர். ஆனால் ஜூன் 17ம் தேதியாகியும் பருவமழை கண்ணாமூச்சி காட்டுகிறது. அணைக்கு நேற்று வரை ஒரு சொட்டு கூட நீர்வரத்து இல்லை. எனவே மழை பெய்து தண்ணீர் வரும் வரை சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அணையிலுள்ள நீர் வெளியேற்றும் அளவை 60 கன அடியில் இருந்து 40 கனஅடியாக குறைத்து கூடுதல் நாட்கள் பயன்படுத்த வாய்ப்புள்ளது.  

எனவே, தற்போது 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கும் முறையை மாற்றி 4 நாட்களுக்கு ஒரு முறை வழங்க அதிகாரிகள் திட்டமிட்டு பரிசீலித்து வருகின்றனர். இதனால் குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

பெரியாறு நீர் திருட்டை தடுக்கவில்லை

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 112.25 அடியாக உள்ளது. நேற்று நீர்வரத்து 100 கனஅடி மட்டுமே உள்ளது. அங்கிருந்து 100 கன அடி வீதம் திறக்கப்பட்டும், ஒரு சொட்டு நீர்கூட வைகை அணைக்கு எட்டவில்லை. ஏனென்றால் வரும்வழிநெடுகிலும் முறைகேடாக மோட்டார் வைத்து உறிஞ்சி தண்ணீர் திருடப்படுகிறது. இதனை தடுத்து, தண்ணீரை வைகை அணைக்கு கொண்டு வந்து சேர்க்க நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர்.

Related Stories: