மதுபாட்டிலை வீசும் சமூக விரோதிகள் நெல்லையப்பர் கோயில் வெளி தெப்பம் பராமரிக்கப்படுமா?

நெல்லை : நெல்லையப்பர் கோயில் வெளி தெப்பக்குளம் மீண்டும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. தெப்பக்குள கரைகளில் இரவு மதுபாட்டில்களை சமூக விரோதிகள் வீசிச்செல்கின்றனர். நெல்லையப்பர் கோயில் வெளித்தெப்பக்குளம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இங்கு நெல்லையப்பர் தெப்ப திருவிழா மட்டுமின்றி குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயில் தெப்ப உற்சவமும் நடந்து வந்தது. குளத்திற்கு அருகே உள்ள நயினார்குளத்தில் இருந்து தண்ணீர் வருவதற்கு தனி சுரங்கப்பாதை இருந்தது. இக்குளம் கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் இருந்தது.

கடந்த ஆண்டு குளம் நீர் அகற்றப்பட்டு உள்பகுதியில் ஆழத்தில் இருந்த தீர்த்தகட்டங்கள் புதுப்பிக்கப்பட்டன. ஆனால் தொடர்ந்து போதிய பராமரிப்பு மேற்கொள்ளப்படவில்லை. இதனால் வெளித்தெப்பக்குளம் மீண்டும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. குளத்தின் உள்பகுதியில் மணல்மேடுகள் உருவாகி அதில் முள்செடி உள்ளிட்டவை வேகமாக வளர்கின்றன. மேலும் பிளாஸ்டிக் பாட்டில்கள், மதுபாட்டில்கள் மற்றும் குப்பைகளும் குளத்தில் வீசப்பட்டு துர்வாடை வீசுகிறது. இதுபோல் குளக்கரையிலும் மதுபாட்டில்கள், பழைய கழிவு துணிகள் ஏராளமாக குவிந்துகிடக்கின்றன. மன்னர் காலத்தில் கட்டப்பட்ட குளங்கள் தான் இப்போதும் நிலத்தடி நீரை சேமிக்க உதவுகிறது. மழை கால்களிலும் இதுபோன்ற கோயில் குளங்களில் சேகரமாகும் நீர் சுற்றுப்பகுதிக்கு நிலத்தடிநீராகவும் பயன்படுகிறது.

இதுபோன்ற கோயில்களோ, நீர் சேமிக்கும் குளங்களோ இப்போது கட்டுவது சாத்தியமில்லை. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இப்போதும் பயன்தரும் இதுபோன்ற குளங்களை காப்பாற்ற கோயில் நிர்வாகம் முன்வரவேண்டும் என பக்தர்களும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். தெப்பக்குளத்தை ஆக்கிரமிக்கும் நபர்களை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் விரும்புகின்றனர்.

Related Stories: