சுவாமிமலை முருகன் கோயில் கோபுரத்தில் ஓம் முருகா என்ற வாசக லைட்டுகள் பல மாதமாக எரியாத அவலம்

* கண்டு கொள்ளாத கோயில் நிர்வாகம்

கும்பகோணம் : சுவாமிமலை முருகன் கோயில் கோபுரத்தில் ஓம் முருகா என்ற வாசகம் அடங்கிய லைட்டுகளை பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் உள்ளது. கும்பகோணம் அடுத்த சுவாமிமலையில் உள்ள முருகன் கோயில் ஆறுபடை வீடுகளுள் நான்காம் படை வீடாகும். இக்கோயிலில் 2015ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின்போது கோயிலில் திருப்பணி செய்யப்பட்டது. அப்போது கோயிலின் கீழ்கோபுரத்தில் டிஜிட்டல் எல்இடி பல்புகள் பொருத்தி ஓம் மற்றும் ஓம் முருகா என்ற எழுத்துகள் எரிய வைக்கப்பட்டது. இதன் வெளிச்சம் 2 கிலோ மீட்டர் சுற்றளவு வரை தெரியும்.

இந்நிலையில் இக்கோயில் கோபுரத்தில் ஓம் என்ற வடிவத்தில் உள்ள லைட்டுக்கள் பல மாதங்களாக எரியாமல் இருந்து வந்தன. அதன்பின்னர் அப்பகுதியில் உள்ள குரங்குகள், ஓம் முருகா என்ற எழுத்துகளை உடைத்து சேதப்படுத்தியது. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்ற சொல்லுக்கேற்ப கோயிலுக்கு வருபவர்கள் முதலில் கோபுரத்தை தரிசனம் செய்வர். ஆனால் கோபுரத்தில் எழுத்துக்கள் இல்லாமல் இருள் சூழ்ந்து இருப்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் பலமுறை பக்தர்கள் தெரிவித்தும் கோயில் நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். எனவே சுவாமிமலை முருகன் கோயிலில் எரியாமல் உள்ள ஓம் மற்றும் ஓம் முருகா எழுத்துகளின் லைட்டுகளை விரைந்து சீரமைத்து எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுது்துள்ளனர்.

Related Stories: