அரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல்.... இன்று நள்ளிரவு குஜராத்தில் கரையை கடக்கிறது

டெல்லி:  அரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல் வலு இழந்த நிலையில் இன்று நள்ளிரவு குஜராத்தில் கரையை கடக்கும் என கூறப்படுகிறது. அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது. இதற்கு ‘வாயு’ என பெயரிடப்பட்டது. அரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல் முதலில் குஜராத்தை நோக்கி நகர்ந்தது. கடந்த 13-ந் தேதி குஜராத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அந்த புயல் திசைமாறி கடலோர பகுதியையொட்டி மேற்கு நோக்கி நகர்ந்தது. பின்னர் வாயு புயல் திசைமாறிச் சென்று மீண்டும் குஜராத்தை நோக்கி நகர்கிறது. எனினும் புயல் வலு இழந்து தாழ்வழுத்த மண்டலமாக மாறி போர்பந்தரில் இருந்து 470 கிலோமீட்டர் தொலைவில் நேற்று காலை கடல் பகுதியில் மையம் கொண்டிருந்தது.

இது 12 கிலோ மீட்டர் வேகத்தில் குஜராத் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மேலும், வாயு புயல் இன்று நள்ளிரவு தாழ்வுநிலையாக மாறி குஜராத் கடற்பகுதியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், அரபிக்கடலை நோக்கி பருவமழைக்கு காரணமான காற்று செல்ல வழி ஏற்படும். இதனால், அடுத்த 2 அல்லது 3 நாட்களில் பருவமழை தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வாயு புயல் வலுவிழந்து கரையை கடக்கும் என்பதால் பெரிய பாதிப்பு இருக்காது எனவும் தெரிவித்துள்ளது.

வாயு புயல் முன்னெச்சரிக்கையாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்கள் மற்றும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 10 மாவட்டங்களை சேர்ந்த 2.91 லட்சம் மக்கள் பாதுகாப்பான  இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Related Stories:

>