ஜோலார்பேட்டை பீடி கம்பெனியில் திருட்டு 5 வடமாநில பெண்கள் குழந்தைகளுடன் கைது: பகலில் குறியீடு போட்டு இரவில் கைவரிசை

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே பீடி கம்பெனியில் பீடி, பணத்தை திருடிய 5 வடமாநில பெண்கள் குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டனர். மேலும் அப்பகுதியில் பதுங்கியிருந்த 25 பேர் கும்பலை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி  வைத்தனர்.

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை  பக்கிரிதக்கா குயில் மண்டி தெருவை சேர்ந்தவர் இலியாஸ்(39). அதே பகுதியில் 2 மாடி கட்டிடத்தில் பீடி கம்பெனி, அலுவலகம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் பீடி கம்பெனி  அலுவலகத்தை பூட்டிவிட்டு சாப்பிட சென்றார். அப்போது, அங்கு 2 குழந்தைகளுடன் அமர்ந்திருந்த வடமாநிலத்தை சேர்ந்த 5 பெண்கள் திடீரென பீடி கம்பெனி அலுவலக ஷட்டரை கள்ளச்சாவி போட்டு திறந்தனர். பின்னர் உள்ளே நுழைந்த அவர்கள், கல்லாப்பெட்டியில் இருந்த ₹5300ஐ  திருடியுள்ளனர். மேலும், அலுவலகத்தின் மாடிக்கு சென்ற அவர்கள் அங்கிருந்த ஷட்டரை திறந்து குழந்தையை உள்ளே நுழையவிட்டு பீடி பண்டல்களையும் திருடியுள்ளனர்.இதற்கிடையில் சாப்பிட்டு விட்டு அலுவலகம் திரும்பிய இலியாஸ், அலுவலக ஷட்டர் திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 5 பெண்கள் குழந்தைகளுடன் இருப்பதை கண்டு திடுக்கிட்டார். அவரை  பார்த்தவுடன் அந்த பெண்கள் தப்பியோட முயன்றனர். உடனே பொதுமக்கள் உதவியுடன் அனைவரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். புகாரின்படி ஜோலார்பேட்டை போலீசார், 5 பெண்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று  விசாரித்தனர். அதில், அவர்கள் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள முன்காவாலி மாவட்டம் புராத்பூர் பகுதியை சேர்ந்த லகான் மனைவி நந்து(21), சான்தோஷ் மகள் பேபி(20), பாபுலால் மனைவி சாய்ராபாய்(55), அசோன் நகர் புத்தரா  பகுதியை சேர்ந்த பாலு மகள் காஜல்(20), குணா மாவட்டம் அஜய் மனைவி குகனா(20) என்பதும் தெரியவந்தது.

 இவர்கள் பகலில் பலூன் வியாபாரம் செய்யும்போது கொள்ளையடிக்கும் இடங்களை தேர்வு செய்து பச்சை அல்லது கருப்பு நிறத்தில் குறியீடு போட்டுவிட்டு இரவு நேரத்தில் வீடு மற்றும் கடைகளில் சென்று திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.  இதையடுத்து 5 பெண்களையும் போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து ஜோலார்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுற்றித்திரிந்த பெண்கள் உட்பட 25 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் திடுக்கிடும் தகவல் ெவளியானது. வேலூர் சத்துவாச்சாரியில் முன்னாள் அதிமுக எம்பி மார்க்கபந்து மகன்கள் மற்றும் தொழிலதிபர் உள்ளிட்டவர்களின் வீடுகளில் கடந்த 3ம் தேதி திருட்டு நடந்தது. இதுதொடர்பாக கடந்த 12ம் தேதி  கோர்ட் அருகே பைக்கில் சுற்றித்திரிந்த மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த காளிசரண், மகேந்தர், சுனில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வேலூர் மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்நிலையில், தற்போது  ஜோலார்பேட்டையில் பிடிபட்ட பெண்களும், வேலூரில் கைதான காளிசரண் உள்ளிட்ட 3 பேரும் உறவினர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.இதற்கிடையில் நேற்று முன்தினம் ஜோலார்பேட்டையில் சிக்கிய 25 பேரில் கர்ப்பிணிகள், கைக்குழந்தைகள், மூதாட்டிகள் என இருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கடுமையாக எச்சரித்து  ரயிலில் ஏற்றி மத்திய பிரதேசத்திற்கு  அனுப்பி வைத்தனர்.

Related Stories: