35,000 கோடி மதிப்பு வாகனங்கள் தேக்கம் கார் உற்பத்தியை நிறுத்தும் நிறுவனங்கள்

* ஷோரூம்கள்    மூடப்படும் அபாயம்

* தொழிலாளர் வேலை  பறிபோகுமா?
Advertising
Advertising

புதுடெல்லி: வாகன விற்பனை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், நாடு முழுதும் சுமார் ₹35,000 கோடி மதிப்பிலான வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் கார் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வருகின்றன.  இதே நிலை தொடர்ந்தால் ஷோரூம்கள் மூடப்படும் அபாயமும், வேலை வாய்ப்பு பறிபோகும் நிலையும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.கடந்த தீபாவளி பண்டிகைக்கு பிறகு வாகன விற்பனை படு மந்தமாகவே இருந்து வருகிறது. ஆண்டு இறுதியில் வழங்கப்பட்ட தள்ளுபடி சலுகைகளும் வாடிக்கையாளர்களை ஈர்க்கவில்லை. இதனால்தான் ஷோரூம்களில் வாகனங்கள்  விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. சுமார் ₹35,000 கோடி மதிப்பிலான சுமார் 5 லட்சம் கார்கள் தேங்கியுள்ளதாக சமீபத்திய புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. இதுேபால், ₹17,000 கோடி சுமார் 30 லட்சம் டூவீலர்கள் டீலர்களிடம்  தேங்கியுள்ளன.

இதன் காரணமாக நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி விட்டன. குறிப்பாக மாருதி சுசூகி, டாடா, ஹோண்டா, மகிந்திரா நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி விட்டன. மாருதி நிறுவனம் இந்த மாதம் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை  தொழிற்சாலையை மூட உள்ளதாக தெரிகிறது.டாடா மோட்டார்ஸ் குஜராத் மாநிலத்தில் உள்ள சனாந்த் தொழிற்சாலையை கடந்த மாதம் 27ம் தேதி முதல் கடந்த 3ம் தேதி வரை மூடி விட்டது. ஹோண்டா கார்ஸ் கடந்த 5ம் தேதி முதல் 8ம்  தேதி வரை உற்பத்தியை நிறுத்தி விட்டன. மகிந்திரா நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 5 முதல் 13 நாட்களுக்கு உற்பத்தியில் ஈடுபடாது என கூறப்படுகிறது. ரெனால்ட் நிசான் மற்றும் ஸ்கோடா உற்பத்தி 4 முதல் 10  நாட்களுக்கு நிறுத்தப்படும் என தெரிகிறது.இவ்வாறு உற்பத்தியை நிறுத்தினாலும், ஷோரூம்களில் தேங்கிக்கிடக்கும் வாகனங்களை விற்பனையானால்தான் புதிய உற்பத்தியும் தேங்காமல் இருக்கும். மக்களிடையே வரவேற்பு உள்ள ஒரு சில மாடல்கள் மட்டும் விற்பனையாகின்றன.  மற்றபடி பெரும்பாலான மாடல்கள் முன்பு போல விற்பனையாவதில்லை என டீலர்கள் தெரிவிக்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால் தொழிற்சாலைகள் மற்றும் ஷோரூம்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும்  அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

விற்பனை தொடர்ந்து மந்தம்

வாகன விற்பனை கடந்த 7 மாதங்களாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த மே மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 20.55 சதவீதம் சரிந்து 2,39,347 வாகனங்கள் விற்பனையாகின. இது கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத சரிவு. 2001ம்  ஆண்டு செப்டம்பரில் பயணிகள் வாகன விற்பனை 21.91 சதவீதம் சரிந்திருந்தது. இதுதவிர, கடந்த மாதத்தில் டூவீலர், வணிக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனையும் சரிவை சந்தித்தது.

Related Stories: