நாடாளுமன்றம் இன்று கூடும் நிலையில் மக்களவை காங்கிரஸ் தலைவர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் சிக்கல்

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டம் இன்று தொடங்கும்நிலையில், மக்களவை காங்கிரஸ் தலைவர் யார் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதேபோல் மற்ற எதிர்க்கட்சிகளும் தங்களின் மக்களவை தலைவர் யார் என அறிவிக்கவில்லை. மத்தியில் பாஜ அரசு மீண்டும் பதவி ஏற்றபின், முதல் நாடாளுமன்ற கூட்டத்ெதாடர் இன்று தொடங்குகிறது. கடந்த மக்களவையில் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே இருந்தார். ஆனால் அவர் இந்த முறைதேர்தலில் தோல்வியடைந்துவிட்டார். தேர்தல் முடிவுகள் வெளியாகி, பாஜ தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றபின், எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி ஆலோசிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் மக்களவை காங்கிரஸ் தலைவர் யார் என அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் தலைவராக ராகுல் தொடர்ந்து நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர் மக்களவை காங்கிரஸ் தலைவராக வாய்ப்பில்லை.

மத்திய அரசு நேற்று நடத்திய, அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத்துடன், மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, கேரள காங்கிரஸ் செயல் தலைவர்  சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனால் இவர்கள் இருவரில் ஒருவர் மக்களவை காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இப்பதவிக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, திருவனந்தபுரத்திலிருந்து 3 முறை தேர்வான எம்.பி சசிதரூர் ஆகியோரும் போட்டியில் உள்ளனர். மக்களவை காங்கிரஸ் தலைவர் பதவி அளிக்கப்பட்டால், அதை ஏற்க தயார் என சசிதரூர் ஏற்கனவே அறிவித்துள்ளார். இதேபோல் மற்ற எதிர்க்கட்சிகளிலும் மக்களவை தலைவர் யார் என அறிவிக்கப்படவில்லை. இதனால் மக்களவையில், அரசு தரப்புக்கு எதிராக செயல்படும்போது, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் ஒழுங்கற்ற நிலை காணப்படுகிறது. எதிர்கட்சிகள் அனைத்தும் மக்களவை தலைவர்களை அறிவித்தபின், எதிர்கட்சிகளின் கூட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

Related Stories: