வேலை நிறுத்தம் 6வது நாளை எட்டியது மம்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்த மேற்கு வங்க மருத்துவர்கள் சம்மதம்: இன்று நாடு தழுவிய போராட்டம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இளநிலை மருத்துவர்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்று 6வது நாளை எட்டியது. இந்நிலையில், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மருத்துவர்கள் முன் வந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நோயாளி ஒருவர் சமீபத்தில் இறந்தார். இதனால், ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள் அங்கு பணியில் இருந்த  இளநிலை மருத்துவர்கள் இருவரை சரமாரியாக தாக்கினர். இதில்  இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் பணி செய்யும் மருத்துவர்களின்   பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி இளநிலை  மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 6வது நாளாக போராட்டம் நீடித்தது. சில தனியார் மருத்துவமனைகளும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இயங்கவில்லை. இதன் காரணமாக  நோயாளிகள் சிகிச்சை  பெற முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்று, முதல்வர் மம்தா பானர்ஜி சில தினங்களுக்கு முன் எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனைக்கு நேரில் சென்று எச்சரித்தார். மிரட்டும் தொனியில் முதல்வர் மம்தா  பேசியதாகவும், அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவித்தனர்.

Advertising
Advertising

மேலும், மம்தாவின் செயலை கண்டித்து 300க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் ராஜினாமா செய்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும்,  மேற்கு வங்க மருத்துவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு மாநில மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், இது தேசிய போராட்டமாக மாறியது. இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பாக இன்று நாடு தழுவிய  மருத்துவர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு மம்தா அழைப்பு விடுத்தார். ஆனால், முதல்வர் என்ஆர்எஸ் மருத்துவமனைக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மருத்துவர்கள் நிபந்தனை விதித்தனர். செய்தியாளர்களை  சந்தித்த மம்தா, ‘மருத்துவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு ஏற்கிறது. மருத்துவர்கள் உடனடியான பணிக்கு திரும்ப வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட்ட  இளநிலை மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால், பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் பின்னர் முடிவு செய்யப்படும் என்று  தெரிகிறது. இது குறித்து இளநிலை மருத்துவர்கள் கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ அரசுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைக்கு பின், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். எப்போதும் எந்த பேச்சுவார்த்தைக்கும்  தயாராக இருக்கிறோம். பேச்சுவார்த்தை நடக்கும் இடம் குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்,” என்றார்.

Related Stories: