தர்மபுரியில் ஏலச்சீட்டு நிறுவனத்தில் நண்பர்களுக்காக ஜாமீன் போட்டவரை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய கந்து வட்டி கும்பல்: எஸ்பியிடம் மனைவி புகார்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா மெணசி அருகே குண்டல்மடுவு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம்(32). இவரது மனைவி காவ்யா(23), தர்மபுரி எஸ்பி ராஜனிடம் நேற்று கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொம்மிடியில் டூவீலர் ஒர்க் ஷாப் நடத்தி வரும் எனது கணவர் சண்முகம், அதே பகுதியை சேர்ந்த ஒரு ஏலச்சீட்டு நிறுவனத்தில், ₹4 லட்சம் சீட்டு எடுத்த நண்பர்களுக்காக, ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளார். சீட்டு எடுத்தவர்கள் பணத்தை  உரிய முறையில் திரும்ப செலுத்தவில்லை. இதனால், கடந்த 12ம் தேதி ஏலச்சீட்டு நடத்துபவர்கள், ஒரு கும்பலாக எனது கணவரின் ஒர்க் ஷாப்பிற்கு சென்று, வட்டியுடன் ₹5 லட்சம் தர வேண்டும் என கேட்டு அவரை மிரட்டினர்.

Advertising
Advertising

இதை  தொடர்ந்து, கடந்த 13ம் தேதி மீண்டும் பணம் கேட்டு, எங்கள் வீட்டிற்கு வந்த கும்பல், எனது கணவரை ஒரு வாகனத்தில் கடத்திச் செல்ல முயன்றனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் எனது கணவர் குளியலறையில் தூக்கு போட்டு  தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த நாங்கள் உடனடியாக அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தோம். தற்போது, தர்மபுரி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, எனது கணவரை தற்கொலைக்கு  தூண்டிய கும்பல் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது குடும்பத்திற்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இது பற்றி விசாரிக்க எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: