60 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்றனர் அதிகளவு மீன்கள் கிடைத்தும் ஆனந்தமில்லாத மீனவர்கள்: இறால் விலை வீழ்ச்சியால் அதிர்ச்சி

ராமேஸ்வரம்: மீன்பிடி தடைகாலம் முடிந்து 60 நாளுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். இறால் மீன்கள் அதிகளவில் கிடைத்த போதிலும், விலை குறைந்ததால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தமிழக கடலில் ஏப். 15 முதல் ஜூன் 14 வரை 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்தது. இதனால் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி, வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்லும் 10 ஆயிரம் விசைப்படகுகள் கரை நிறுத்தப்பட்டன. மேலும், 2  லட்சம் மீனவர்கள் வேலை இழந்து மாற்றுத்தொழில் ஈடுபட்டனர். ஜூன் 14ம் தேதி நள்ளிரவு 12 மணியுடன் மீன்பிடி தடை விலகியதால், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 1,500க்கும் அதிகமாக விசைப்படகுகளில்  ஏராளமான மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று காலை கரை திரும்பினர்.

படகுகளில் 300 கிலோ முதல் 800 கிலோ வரை இறால் மீன்கள் இருந்தது. மேலும் கடல் நண்டு, கனவாய் உள்பட பல வகையான மீன்கள் கிடைத்தன. இறால் மீன்கள் அதிக விலைக்குப் போகும் என்பதால் மீனவர்கள் மகிழ்ச்சியுடன்  கரைதிரும்பினர். ஆனால், இறால் மீன்களுக்கு கிலோ ₹350 முதல் ₹400 வரை விலை நிர்ணயம் செய்து வியாபாரிகள் வாங்கி சென்றனர். இதனால், மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.வழக்கமாக ₹570 வரை விலை போகும் இறால் மீன்கள் நேற்று குறைந்த விலைக்கே போனதால், அதிக இறால் பிடிபட்டதில் காலையில் மகிழ்ச்சியாக காணப்பட்ட மீனவர்கள், விலை குறைவால் அதிருப்தியடைந்தனர். எதிர்பாராத வகையில்  டன் கணக்கில் இறால் வரத்து இருந்ததாலும், பிடித்து வரப்பட்ட இறால் மீன்களை பாதுகாக்க, ஐஸ்கட்டிகள் பற்றாக்குறை ஏற்பட்டதால், உடனே அவற்றை விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். மீன் வியாபாரிகளும் சின்டிகேட்  அமைத்து குறைந்த விலைக்கு வாங்கி சென்றனர்.

கடலுக்கு செல்ல மறுப்பு

ராமேஸ்வரத்தில் நேற்று மாலை மீனவர் சங்க பிரதிநிதிகள் அவசரக் கூட்டம் சங்க தலைவர் போஸ் தலைமையில் நடந்தது. இதில் இறால் மீன்களுக்கு உரிய விலையை அரசு நிர்ணயம் செய்யவும், சின்டிகேட் அமைத்து இறால் மீன்கள்  கொள்முதல் செய்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வேலை ஆட்கள் பிரச்னையாலும் ஐஸ் கட்டிகள் மற்றும் மீன் ஏற்றி செல்லும் வாகனங்கள் பற்றாக்குறையாக இருப்பதாலும், இறால் மீன்  ஏற்றுமதியாளர்கள் நாளை (இன்று) ராமேஸ்வரத்திற்கு மீன் கொள்முதல் செய்ய வரஇயலாது என்று கூறி விட்டனர். இதனால் இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்வதில்லை என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Related Stories: