அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மாதவரம் குளத்தை மக்களே தூர்வாரினர்

திருவொற்றியூர்:  மாதவரத்தில் உள்ள குளத்தை தூர்வாரி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்களே தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 33வது வார்டுக்கு உட்பட்ட பொன்னியம்மன் மேடு பகுதியில் குளப்பன் குளம் உள்ளது. மழை காலத்தில் சுற்று வட்டாரத்தில் இருந்து வரக்கூடிய தண்ணீர் இந்த குளத்தில் தேங்குவதால், மழைநீர் சேமிப்பு பகுதியாகவும், குடியிருப்புகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. ஆனால், பல ஆண்டுகளாக இந்த குளத்தை அதிகாரிகள் சீரமைக்காததால், தூர்ந்துள்ளது. தற்போது, கோடை காலம் என்பதால் குளம் முற்றிலும் வறண்டுள்ளது. எனவே, வரும் மழைக் காலத்திற்குள் குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தி வந்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.

 இதனால், மாதவரம் குடியிருப்போர் நல சங்க கூட்டமைப்பினர், பொதுமக்களுடன் இணைந்து, இந்த குளப்பன்  குளத்தை தூர்வாரி சீரமைக்க திட்டமிட்டு, இதற்கான பணிகளை நேற்று தொடங்கினர். பொக்லைன் இயந்திரம் மூலம்  தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் படிப்படியாக மாதவரத்தில் உள்ள அனைத்து குளங்களையும் மாதவரம் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பின் சார்பில் தூர்வாரி சீரமைக்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: