×

மெட்ரோ ரயில் - எம்டிசி இடையே ஒத்துழைப்பு இல்லாததால் கிடப்பில் ஸ்மார்ட் கார்டு திட்டம்

சென்னை: சென்னையில் முதல் வழித்தட மெட்ரோ ரயில் திட்டம் முடிந்த பிறகும் மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்தில் ஒரே அட்டையை கொண்டு பயணம் செய்யும் ஸ்மார்ட் கார்டு திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 45.1 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் முதல் வழித்தட திட்டப்பணிகள் கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்ட பணிகள் முழுமையாக முடிவடைந்து, இறுதி வழித்தடமான டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வழித்தட பணிகள் கடந்த பிப்ரவரி 10ம் தேதி தொடங்கப்பட்டது. தற்போது, முதல் வழித்தட திட்டம் முழுமை அடைந்து, ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில்லரை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்து சேவையை ஒன்றிணைத்து ஒரே அட்டையில் பயணம் செய்யும் ஸ்மார்ட் கார்டு திட்டத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது.இத்திட்டத்தின் மூலம் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் பேருந்திற்கு என தனியாக டிக்கெட் எடுக்க தேவையில்லை. மெட்ரோவில் பயன்படுத்தும் ஸ்மார்ட் கார்டை கொண்டே மாநகர பேருந்துகளில் பயணம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இது பயணிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதேபோல், தெற்கு ரயில்வே துறையையும் இணைத்து புறநகர் ரயில்களிலும் இதே கார்டை கொண்டு பயணம் செய்யும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தை 2018ம் ஆண்டுக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர இருப்பதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால், முதல் வழித்தட திட்டம் கடந்த ஆண்டு முழுமை பெறாததால் இத்திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனது.
தற்போது கடந்த பிப்ரவரி மாதத்துடன் முதல் வழித்தட திட்டம் முழுமை அடைந்துள்ள நிலையிலும் மூன்று போக்குவரத்து துறைகளையும் ஒன்றிணைக்கும் இத்திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: முதல் வழித்தட திட்டம் முடிந்ததும் ஸ்மார்ட் கார்டு திட்டத்தை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு இறுதிக்குள் இத்திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், மாநகர போக்குவரத்துக் கழகம் தரப்பில் இருந்து தொடர் இழுபறி நீடித்து வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் தயாராக உள்ளது. தெற்கு ரயில்வே துறையுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags : Metro Rail ,Smart , Metro Rail , Smart card ,scheme ,lack , cooperation between MTC
× RELATED சர்வதேச விமான சேவை, மெட்ரோ ரயில் சேவை...