மதுரையில் நடந்த வாகனசோதனையில் விபரீதம் டூவீலரில் லத்தியை வீசினார் போலீஸ் நிலைதடுமாறி விழுந்து வியாபாரி பலி: உறவினர்கள் சாலை மறியல்

மதுரை: மதுரையில் வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற டூவீலர் மீது போலீசார் லத்தியை வீசியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வியாபாரி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.மதுரை, எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தகுமார் (27). சிம்மக்கல் பகுதியில் பழைய டயர் கடை நடத்தி வந்தார். நேற்றுமுன்தினம் இரவு இவரும், இவரது நண்பர் சரவணக்குமாரும் டூவீலரில் செல்லூர் புதிய மேம்பாலத்தில்  வந்தனர். அங்கு வாகன சோதனை நடத்தி கொண்டிருந்த போலீசார், இவர்கள் வந்த டூவீலரை வழிமறித்தனர். ஆனால், இருவரும் நிறுத்தாமல் செல்ல முயன்றனர். அப்போது, போலீஸ்காரர் ஒருவர் தனது கையில் வைத்திருந்த லத்தியை  அவர்கள் மீது சுழற்றி வீசியுள்ளார்.இதில் லத்தி டூவீலர் சக்கரத்தின் உள்ளே சிக்கியதில், விவேகானந்தகுமார்  நிலைதடுமாறி விழுந்து படுகாயத்துடன் மயங்கி சாய்ந்தார். அவருடன் வந்த சரவணக்குமாரை போலீசார் தாக்கி உள்ளனர். தகவலறிந்து வந்த நண்பர்கள், இருவரையும்  மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு கோமா நிலையில் இருந்து வந்த விவேகானந்தகுமார், நேற்று மாலை உயிரிழந்தார். போலீசாரின் லத்தி வீச்சில் படுகாயமடைந்து உயிரிழந்த  விவேகானந்தகுமாருக்கு 2 ஆண்டுக்கு முன்பு தான் திருமணமானது. இவருக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் விவேகானந்த குமாரின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் போலீசாரின் லத்தி வீச்சில் பலியான வியாபாரி விவேகானந்தகுமாரின் உடலை வாங்க மறுத்து நேற்றிரவு மதுரை அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார்  வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் உடலை வாங்கிச் செல்லும்படி மிரட்டினர். ஆனால் அவர்கள், விவேகானந்தகுமாரின் உடலை வாங்க மறுத்து தொடர் மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது.

தொடரும் அத்துமீறல்கள்

மதுரையில் ஹெல்மெட் சோதனை நடத்தும் போதெல்லாம் போலீசார் அத்துமீறி நடந்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் பசுமலை செக்போஸ்ட் பகுதியில் வாகன சோதனையில் டூவீலரில் வந்த ஒருவரின் மீது லத்தியை வீசியதில்  அவர் கீழே விழுந்து உயிரிழந்தார். இப்போது டூவீலர் மீது போலீசார் லத்தியை வீசியதில் விவேகானந்தகுமார் பலியாகி உள்ளார். மதுரை நகரில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

Related Stories: