திறக்கப்பட்ட முதல் நாளிலேயே ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி: ஆசாமி துணிகரம்

ஆவடி: பட்டாபிராமில் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.ஆவடி அடுத்த பட்டாபிராம், மகாத்மா காந்தி ரோட்டில் எச்டிஎப்சி வங்கியின் ஏடிஎம் மையம் நேற்று முன்தினம்  திறக்கப்பட்டது. இந்தப் பகுதியில் நள்ளிரவு 2 மணி அளவில் ஏடிஎம் மையத்தில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. இதை கேட்ட அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வெளியே வந்து பார்த்தபோது ஏடிஎம் மையத்துக்குள் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் அமர்ந்து  இயந்திரத்தை  உடைத்துக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.  உடனே அவர், அந்த நபரை  ஏடிஎம் மையத்தின் உள்ளே வைத்து ஷட்டரை இழுத்து மூடிவிட்டு பட்டாபிராம் போலீசாருக்கு செல்போன் மூலமாக தகவல் கொடுத்தார்.

இதற்கிடையே அந்த ஆசாமி, ஷட்டரை திறந்து மையத்துக்குள் இருந்து வெளியே வந்து மின்னல் வேகத்தில் ஓடி தலைமறைவானார். அதன்பிறகு ரோந்து பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.  தகவலின்பேரில்  வங்கி அதிகாரிகள் விரைந்து வந்து பார்த்தபோது ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ₹10 லட்சம் தப்பியது தெரியவந்தது.இதுபற்றிய புகாரின்படி பட்டாபிராம் போலீசார், வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமராவில் பதிவான உருவத்தை வைத்து ஆய்வு செய்தனர். தப்பியோடிய நபர் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>