மும்பையில் மிஸ் இந்தியா 2019 போட்டி ராஜஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவி இந்திய அழகியாக தேர்வு

மும்பை: ‘மிஸ் இந்தியா 2019’ அழகியாக ராஜஸ்தானைச் சேர்ந்த கல்லூரி மாணவி சுமன் ராவ் தேர்வு செய்யப்பட்டார். மும்பை ஒர்லியில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அரங்கத்தில் நேற்று முன்தினம் இரவு ‘மிஸ் இந்தியா 2019’ அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 10 அழகிகள் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். இதில் ராஜஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவியான சுமன் ராவ், ‘மிஸ் இந்தியா 2019’ பட்டம் வென்றார். சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஷினி ஜாதவ் இரண்டாவது இடத்தையும் (மிஸ் கிராண்ட் இந்தியா 2019), பீகாரைச் சேர்ந்த ஸ்ரேயா சங்கர் மூன்றாவது இடத்தையும் (மிஸ் இந்தியா யுனைடெட் கான்டினென்ட்ஸ்) பெற்றனர். இப்போட்டியில் பட்டம் வென்ற சுமன் ராவ், தாய்லாந்தில் நடைபெறும், ‘மிஸ் வேர்ல்டு 2019’ அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

‘‘ஒரு இலக்கை அடைய வேண்டும் என்று நீங்கள் உறுதிகொள்ளும் பட்சத்தில் உங்கள் உடலின் ஒவ்வொரு நரம்பும் தசையும் அந்த இலக்கை அடைய வேலை செய்து வெற்றி தேடித்தரும்’’ என்று இறுதிச்சுற்றில் தன்னிடம் கேட்ட கேள்விக்கு பதிலளித்து  அழகிப் பட்டத்தை வென்றார் சுமன் ராவ்.இந்த நிகழ்ச்சியில், முன்னாள் உலக அழகி மனுஷி சில்லர், பாலிவுட் திரைப்பட இயக்குனரும் நடன இயக்குனருமான ரெமோ டிசோசா, நடிகைகள் ஹூமா குரேஷி, சித்ரங்கதா சிக், பேஷன் டிசைனர் பால்குரி ஷானே, இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். பாலிவுட் நட்சத்திரங்கள் கத்ரினா கைஃப், விக்கி  கவுசல், மவுனி ராய் ஆகியோரது நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Related Stories:

>