ரோகித் 140, கோஹ்லி 77, ராகுல் 57 ரன் விளாசல் பாகிஸ்தானுக்கு 337 ரன் இலக்கு

மான்செஸ்டர்,: இந்திய அணியுடனான உலக கோப்பை லீக் ஆட்டத்தில், ரோகித் ஷர்மாவின் அபார சதத்தால் பாகிஸ்தான் அணிக்கு 337 ரன் கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியைக் காண இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் ஆர்வமுடன் திரண்டதால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது. டாசில் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது முதலில் பந்துவீச முடிவு செய்தார். முன்னாள் கேப்டனும் பாகிஸ்தானின் தற்போதைய பிரதமருமான இம்ரான் கான், டாஸ் வென்று பேட் செய்ய வலியுறுத்தி இருந்த நிலையில் சர்பராஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.சிறப்பான தொடக்கம்: இந்திய அணியில் தவானுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கர் சேர்க்கப்பட்டார். தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா, லோகேஷ் ராகுல் களமிறங்கினர். முகமது ஆமிர் முதல் ஓவரில் ஒரு ரன் கூட கொடுக்காமல் மெய்டனாக வீசி அசத்தினார். நிதானமாக விளையாடிய ரோகித் - ராகுல் இருவரும் 10 ஓவரில் 53 ரன் சேர்த்தனர். கடினமான கேட்ச் வாய்ப்பு, ரன் அவுட் வாய்ப்பை பாக். வீரர்கள் கோட்டைவிட்டதும் இந்த ஜோடிக்கு உற்சாகத்தை கொடுத்தது.ரோகித் 34 பந்தில் அரை சதம் அடிக்க, மறுமுனையில் ராகுல் 45 பந்தில் அரை சதத்தை எட்டினார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 23.4 ஓவரில் 136 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். ராகுல் 57 ரன் (78 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ரியாஸ் வேகத்தில் பாபரிடம் பிடிபட்டார். அடுத்து ரோகித்துடன் கேப்டன் விராத் கோஹ்லி இணைந்தார்.

அசத்தல் சதம்: அதிரடியாக விளையாடிய ரோகித் 85 பந்தில் சதத்தை நிறைவு செய்தார். ஒருநாள் போட்டிகளில் இது அவரது 24வது சதமாகும். ரோகித் - கோஹ்லி இணை 2வது விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்தது. ரோகித் 140 ரன் (113 பந்து, 14 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஹசன் அலி பந்துவீச்சில் ரியாஸ் வசம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து கோஹ்லி - ஹர்திக் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்தது. கோஹ்லி 51 பந்தில் அரை சதம் அடித்தார். ஹர்திக் 26 ரன் எடுத்து (19 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஆமிர் வேகத்தில் பாபர் வசம் பிடிபட, ரசிகர்களின் ஆரவார வரவேற்புடன் உள்ளே வந்த டோனி 1 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தார். மழை குறுக்கீடு: இந்திய அணி 46.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன் எடுத்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது (கோஹ்லி 71 ரன், விஜய் ஷங்கர் 3). சிறிது நேர தாமதத்துக்குப் பின்னர் ஆட்டம் தொடர்ந்த நிலையில், கோஹ்லி 77 ரன் (65 பந்து, 7 பவுண்டரி) விளாசி ஆமிர் வேகத்தில் விக்கெட் கீப்பர் சர்பராஸ் வசம் பிடிபட்டார்.இந்தியா 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன் குவித்தது. விஜய் ஷங்கர் 15 ரன், கேதார் ஜாதவ் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து 337 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பகார் ஸமான், இமாம் உல் ஹக் இருவரும் துரத்தலை தொடங்கினர்.

சாதனை தொடக்கம்!

இந்திய அணி தொடக்க வீரர்கள் ரோகித் - கே.எல்.ராகுல் இணைந்து செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்தது புதிய சாதனையாக அமைந்தது. உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக 100+ ரன் எடுத்த முதல் இந்திய தொடக்க ஜோடி என்ற பெருமை இவர்களுக்கு கிடைத்துள்ளது, முன்னதாக, 1996 உலக கோப்பை கால் இறுதியில் சித்து - சச்சின் தொடக்க ஜோடி 90 ரன் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த சாதனை நேற்று முறியடிக்கப்பட்டது (136 ரன்).

டோனி 2வது இடம்

அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள் வரிசையில் எம்.எஸ்.டோனி 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். நேற்று தனது 341வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய அவர் ராகுல் டிராவிடை (340) முந்தினார். சச்சின் டெண்டுல்கர் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் உள்ளார்.

டோனியை முந்தினார்

டெஸ்ட், ஒருநாள், டி20 என சர்வதேச போட்டிகளில் அதிக சிக்சர் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமை எம்.எஸ்.டோனி வசம் இருந்தது. அவர் 355 சிக்சருடன் முதல் இடத்தில் இருந்தார். நேற்று 3 சிக்சர் விளாசிய ரோகித், டோனியின் சாதனையை முறியடித்து (357 சிக்சர்) முதலிடத்துக்கு முன்னேறினார். உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமையும் ரோகித்துக்கு கிடைத்துள்ளது. முன்னதாக, 2015 உலக கோப்பையில் கோஹ்லி சதம் அடித்திருந்தார். நடப்பு உலக கோப்பையில் ரோகித் தனது 2வது சதத்தை பதிவு செய்துள்ளார். சவுத்தாம்ப்டனில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக நடந்த லீக் ஆட்டத்தில் அவர் 122 ரன் விளாசியிருந்தார்.

விரைவாக 11,000 ரன்

ஒருநாள் போட்டிகளில் அதிவிரைவாக 11,000 ரன் கடந்த வீரர் என்ற சாதனை கோஹ்லி வசமாகி உள்ளது. நேற்று தனது 222வது ஒருநாள் போட்டியில் விளையாடிய அவர் இந்த சாதனை மைல்கல்லை எட்டினார். முன்னதாக, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் 276 ஒருநாள் போட்டிகளில் 11,000 ரன் கடந்ததே சாதனையாக இருந்தது. அதை கோஹ்லி முறியடித்தார்.

ஆமிர், ரியாசுக்கு எச்சரிக்கை

பந்துவீச்சின்போது ஆடுகளத்தின் தடை செய்யப்பட்ட பகுதியில் ஓடி சேதப்படுத்த முயன்றதாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்கள் முகமது ஆமிர் 2 முறையும், வகாப் ரியாஸ் ஒரு முறையும் நடுவரால் எச்சரிக்கப்பட்டனர்.

Related Stories:

>