சதுரகிரி மலையில் இரவு முழுக்க ஆய்வுசெய்த வெளிநாட்டு ஆசாமி

வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் ஆய்வு என்ற பெயரில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் இரவு முழுவதும் தங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. பிரதோஷத்தை முன்னிட்டு கடந்த 13ம் தேதி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் மாலை நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சந்திரசேகரராம் (51) என்பவர் மலை ஏறினார். இரவு முழுவதும் மலையில் தங்கிய அவர் நேற்று காலை கீழே இறங்கினார். இவர் தாணிப்பாறை கேட்டில் டோக்கன் மட்டும் வாங்கிவிட்டு மலை ஏறியதாகவும், வனத்துறையிடம் உரிய அனுமதி வாங்கவில்லை என்றும் தகவல் கிடைத்தது. இதையடுத்து அடிவாரத்தில் இருந்த போலீசார் அவரிடம் விசாரித்தனர். அப்போது, நியூசிலாந்து நாட்டில் இருந்து வருவதாகவும், ஆய்வுக்காக சதுரகிரி மலைக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் தன்னிடம் இருந்த பாஸ்போர்ட்டை காட்டினார். அங்கிருந்த நிருபர்கள் அவரை புகைப்படம் எடுக்க முயன்றனர். ஆனால் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.பக்தர்கள் கூறுகையில், ‘‘வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் ஆய்வு என்று கூறி இரவு முழுவதும் மலையில் தங்கியது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர் எந்த மாதிரியான ஆய்வை மலையில் மேற்கொண்டார் என தெரியவில்லை. அவர் வனத்துறையிடம் அனுமதி பெறவில்லை. தாணிப்பாறை கேட்டில் டோக்கனை மட்டும் கொடுத்து அவரை மேலே அனுப்பியுள்ளனர். அவரிடம் முறையான விசாரணை நடத்தாமல் போலீசார் அலட்சியமாக அனுப்பிவிட்டனர். அவர் நடத்திய ஆய்வு குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: