அரசு அலுவலகங்கள், மருத்துவமனையில் சுழற்சி முறையில் ஆய்வு செய்ய வேண்டும்

* பொறியாளர்களுக்கு முதன்மை தலைமை பொறியாளர் உத்தரவு

* அறிவிப்பு பலகை வைக்க அறிவுரை

சென்னை: அரசு அலுவலகங்கள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை என்ற புகார் எழுந்த நிலையில், தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்,  செயற்பொறியாளர் நிலையிலான அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்று கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகன் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பள்ளிகல்வித்துறை, வருவாய்துறை, வணிகவரித்துறை, நீதித்துறை உட்பட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அலுவலக கட்டிடங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் உள்ளன. இந்த அரசு  அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளின் பராமரிப்பு பணி பொதுப்பணித்துறையின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர் நிலையிலான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பராமரிப்பு பணிக்கென தனியாக நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்த நிதியை கொண்டு அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, வளாகங்கள் மற்றும் கழிப்பிடங்களை சுத்தம் செய்வதில்லை என்றும், முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் ஜெனரேட்டர், ஏர் கண்டிஷனர், லிப்ட் அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக  ஏராளமான புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட தலைமை மருத்துவமனை, தாலுகா அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், வணிகவரித்துறை அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் மற்றும்  பள்ளிகளின் முகப்புகளில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வாரத்திற்கு ஒருமுறையும், கண்காணிப்பு பொறியாளர் 15 நாட்களுக்கு ஒரு முறையும், தலைமை பொறியாளர் 20 நாட்களுக்கு ஒருமுறையும் ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை  முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் அதிகம் கூடும் அரசு அலுவலக கட்டிடங்களின் முகப்பு பகுதி அல்லது பொதுமக்கள் பார்க்கும் இடத்தில் 4க்கு 2 என்கிற அடிப்படையில் நோட்டீஸ் போர்டு  வைக்க வேண்டும். அதில், செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், தலைமை பொறியாளர் எப்போது ஆய்வு செய்தனர் என்பதை தேதியுடன் குறிப்பிட வேண்டும். மேலும், அதிகாரிகள் ஆய்வு செய்ததை தனிப்பதிவேட்டில் பராமரிக்க  வேண்டும். அந்த பதிவேட்டில் ஆய்வின் போது அதிகாரிகள் சொன்ன குறைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். இந்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: