தேர்வின் பெயரால் கட்டணக் கொள்ளை சிறப்பு மனு தாக்கல் செய்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: சிறப்பு மனு தாக்கல் செய்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தேர்வின் பெயரால் கட்டணக் கொள்ளை நடந்து வருகிறது என்று தமிழக அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் 2018ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வில் 13 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண்  பெற்றால் கூட தேர்ச்சி பெறுவதுடன் மருத்துவப் படிப்பில் சேரவும் முடிகிறது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமல்ல, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே நிலையே தொடருகிறது.நடப்பாண்டில் இந்தியா முழுவதும் சுமார் 65,000 மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளன. ஆனால், இந்த ஆண்டில் நீட் தேர்வு எழுதிய 14,10,755 பேரில் 7,97,042 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நியாயமான முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால்,  இவர்களில் முதல் 65,000 இடங்களைப் பெற்றவர்களுக்கு மட்டும்தான் இடம் கிடைக்க வேண்டும். ஆனால், முதல் 50,000 இடங்களுக்குள் வந்தவர்களுக்குக் கூட இடம் கிடைப்பதில்லை; அதேநேரத்தில் 7 லட்சத்திற்கு அதிகமான தரவரிசையில்  வந்தவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கிறது. இதற்கு காரணம் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஓராண்டுக்கு ₹25 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவது தான்.

கடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை விவரங்களின் அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய சமூகநீதியில் அக்கறை கொண்ட வல்லுனர் குழுவை  அமைக்க வேண்டும். அக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் நீட் தேர்வை ரத்து செய்வது பற்றி முடிவெடுக்க வேண்டும். இதைச் செய்ய மத்திய அரசு தவறும் பட்சத்தில் நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில்  தமிழக அரசு, இந்த கோரிக்கையை வலியுறுத்தி சிறப்பு மனுவைத் தாக்கல் செய்து நீட் தேர்வை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : candidate ,Government ,Tamil Nadu ,NEAT , Payment,name ,cancel, Government ,Tamil Nadu
× RELATED கேரளாவில் கன்னியாஸ்திரி எழுதிய புத்தகத்துக்கு தடைகோரிய மனு தள்ளுபடி