குடிக்க தண்ணீர் கிடைக்காததால் தற்கொலை செய்யப் போகிறோம்: பிரதமருக்கு உபி விவசாயி கடிதம்

ஹத்ராஸ்: குடிக்க தண்ணீர் கிடைக்காத கொடுமையால் குடும்பத்துடன் தற்கொலை செய்ய அனுமதி கேட்டு பிரதமர் மோடிக்கு உத்தர பிரதேச விவசாயி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.   உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள ஹத்ராஸ் மாவட்டத்தின் ஹசயான் தாலுகாவை சேர்ந்த விவசாயி சந்திரபால் சிங். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், குடிக்க தண்ணீர் கிடைக்காதது குறித்து மாநில அரசிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் சந்திரபால் சிங் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

Advertising
Advertising

இது தொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது குறித்து சந்திரபால் சிங் நேற்று அளித்த பேட்டி:  எங்கள் பகுதியில் கிடைக்கும் தண்ணீர் மிகுந்த உப்பாக உள்ளது. அதை குடித்த எனது மகள் வாந்தி எடுத்து விட்டாள். இந்த தண்ணீரை பயிருக்கு ஊற்றியபோது அதுவும் கருகிவிட்டது. என்னால் எனது குடும்ப தேவைக்கு வாட்டர் கேன்களை விலைக்கு வாங்கும் அளவுக்கு வசதியில்லை. இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் மாநில அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. குடிக்க தண்ணீர் கிடைக்காத காரணத்தால் நானும் எனது மைனர் மகள்கள் 3 பேரும் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்கு பிரதமர் அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: