முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்ட எடியூரப்பா கைது

பெங்களூரு: ஜிந்தால் இரும்பு நிறுவனத்துக்கு ஒதுக்கிய நிலத்தை திரும்ப பெற  வலியுறுத்தி, கர்நாடகா முதல்வர் இல்லத்தை முற்றுகையிட சென்ற எடியூரப்பா கைது செய்யப்பட்டார். கர்நாடகாவில் முதல்வர்  குமாரசாமி  தலைமையில் சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஜிந்தால் இரும்பு  நிறுவனத்திற்கு 3,550 ஏக்கர் நிலம் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மாநில பாஜ தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த அனுமதியை  ரத்து செய்யக்கோரி பெங்களூருவில் இரவு -பகல் தர்ணா போராட்டம் நடத்தினார். இந்நிலையில், நேற்று  காலை எடியூரப்பா தலைமையில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் சிவானந்தா  சர்க்கிளில் திரண்டனர். பின்னர் அங்கிருந்து முதல்வர் குமாரசாமியின் அரசு இல்லமான கிருஷ்ணாவை முற்றுகையிட  புறப்பட்டனர். இதையடுத்து, எடியூரப்பா, பாஜ எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள், எம்எல்சிகள் மற்றும்  கட்சியின் மூத்த நிர்வாகிகளை கூண்டோடு கைது செய்து பஸ்சில் ஏற்றினர். அங்கிருந்து,  கப்பன் பூங்காவுக்கு அழைத்துச் சென்று  விடுதலை செய்து  அனுப்பி வைத்தனர்.

Advertising
Advertising

பின்னர், எடியூரப்பா அளித்த பேட்டியில், ‘‘காங்கிரசை சேர்ந்தவருக்கு சொந்தமான ஜிந்தால் நிறுவனத்திற்கு அரசு 3,550  ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு அரசு விற்றுள்ளது. இதற்காக, ஆட்சியில் உள்ளவர்கள் கணிசமான தொகையை லஞ்சமாக பெற்றுள்ளனர். அரசு  நிலத்தை ஜிந்தால் நிறுவனத்திற்கு கொடுக்க முடிவு செய்தது யாரை  திருப்திப்படுத்த முயற்சிக்கிறார் என்பதை  முதல்வர் குமாரசாமி  தெளிவுபடுத்த வேண்டும். ரூ.1,230 கோடிக்கு மேல் மக்கள் பணத்தை மோசடி செய்துள்ள ஐஎம்ஏ நிறுவனத்தின் தலைவர் முகமது மன்சூர் அலிகான், அமைச்சர் ஜமீர் அகமத்கானுக்கு மிகவும் நெருக்கமானவர். இது மாநில போலீசார் விசாரணை நடத்துவதை கைவிட்டு, சிபிஐ  விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அரசு அறிவித்தபடி, விவசாயிகள்  வங்கி  கடனை உடனே தள்ளுபடி செய்ய வேண்டும்,’’ என்றார்.

பேசலாம் வாங்க...குமாரசாமி கடிதம்

எடியூரப்பாவுக்கு குமாரசாமி எழுதியுள்ள கடிதத்தில், ‘ஐஎம்ஏ நிதி நிறுவன முறைகேடு, ஜிந்தால் நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கிய விவகாரம், விவசாய கடன் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து நேரில் விவாதிக்க தயாராக இருக்கிறேன். மக்களுக்காக நீங்கள் போராடுவது உண்மை என்றால் எனது அழைப்பை ஏற்று நேரில் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இக்கடிதத்தை மஜத அமைச்சர் ஒருவர், எடியூரப்பாவை நேரில் சந்தித்து வழங்கினார்.

Related Stories: