மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு: தமிழக அரசு விசாரணைக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பல்வேறு முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் பட்டியல், 19.3.2019 அன்று பல்கலைக்கழக இணையத்தில்  வெளியிடப்பட்டது. மதுரையில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் முடிவுகள் எதையும் வெளியிடவே இல்லை. மாணவர்களுக்கும் எந்தத் தகவலும் அனுப்பவில்லை. ஆனால் அவர்களை, 13.5.2019 அன்று நடைபெற உள்ள கலந்தாய்வுக்கு வரும்படி, பல்கலைக்கழக நிர்வாகம் கடிதம் அனுப்பியது. நுழைவுத் தேர்வு எழுதிய சில மாணவர்களுக்கும் கடிதங்கள் அனுப்பியது. பெரும்பாலான கடிதங்கள் மாணவர்களுக்கு போய்ச் சேரவே இல்லை. இந்த விவரங்கள் எதுவும் தெரியாத மாணவர்கள் பலர், இன்னமும் பல்கலைக்கழகத்தின் வலைதளத்தையே பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில், மாணவர் சேர்க்கையில் தாங்கள் செய்த தவறுகளையும், முறைகேடுகளையும் மறைப்பதற்காக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக வலைதளத்தில் வெளியிடப்பட்டு இருந்த மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்புகள், நுழைவுச் சீட்டு அறிவிப்புகள் அனைத்தையும் திடீரென நீக்கி விட்டனர். இது மாணவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.எனவே, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2019-20ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையில் நடைபெற்றுள்ள மாபெரும் மோசடி குறித்து, தக்க விசாரணை நடத்த வேண்டும். முறைகேடான மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும். தகுதி உடைய மாணவர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்புகளில் இடம் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முறைகேடு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: