மின்வாரியத்தில் கேங்மேன் பதவியில் முறைகேடு விண்ணப்ப தேதியை நீட்டிக்க முயற்சி?: தொமுச குற்றச்சாட்டு; வழக்கு தொடரவும் முடிவு

சென்னை: நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கேங்மேன் பதவி குறித்து பயிற்சி புத்தகம் வெளியிட்டும், இணையதளம் மூலம் பதிவு செய்வதற்கான தேதியை கால நீட்டிப்பு செய்ய முயற்சி நடப்பதை கண்டித்தும், தொமுச சார்பில் மின்வாரியத்தின் மீது வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:மின்வாரியத்தில் ஒப்பந்தத்தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து  வருகின்றனர். பணி நிரந்தரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்ற பிறகும், தற்போது வரை நீதிமன்ற தீர்ப்பு மதிக்கப்படாமல் இருக்கிறது. புதிய டிரான்ஸ்பார்மர், மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட கள பணிகளை இவர்கள் தான் செய்கின்றனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் 7ம் தேதி திடீரென்று வரலாற்றில் இல்லாத கேங்மேன் என்ற 5,000 பதவியை உருவாக்கி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தொமுச தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 12ம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது (ஸ்டேடஸ் கோ) தற்போதைய நிலையே தொடர வேண்டும். வாரியத்தில் புதிய பணிநியமனம் தொடர்பாக எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு போன்ற எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்ககூடாது. வழக்கை டிவிஷன் பெஞ்சிற்கு  மாற்றியும் உத்தரவிடப்பட்டது.  

இப்பதவிக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி ஏப்ரல் 24ம் தேதி துவங்கியது. கடைசி நாள் ஜூன் 17ம் தேதி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது  மீண்டும் கால நீடிப்பு  செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். அதிமுக அரசும் மின்வாரியமும் எந்தவொரு விதிமுறைகளையும் மதிக்காமல் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டு வருவதற்கு தொமுச கண்டனம் தெரிவிக்கிறது. உயர் நீதிமன்ற உத்தரவை மதித்து மின்வாரியம் கேங்மேன் பதவி தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. மீண்டும்  இதே நிலை நீடித்தால் தொமுச சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். அதேபோல் கேங்மேன் பதவி தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில் மின்வாரியத்திலுள்ள சிலர்  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தொழிலாளர்களிடம் பல ஆயிரம் பணம்  வசூல் செய்து வருகின்றனர். கேங்மேன் பதவி குறித்து புத்தகம் வெளியிட்டு அதற்கும் பணம் வசூல் செய்து வருகின்றனர். இது முற்றிலும் நீதிமன்ற அவமதிப்பு செயலாகும் எனவே யாராக  இருந்தாலும் நீதிமன்ற உத்தரவை மதித்து மறு உத்தரவு வரும் வரை கேங்மேன் பதவி தொடர்பாக  எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories:

>