தமிழக உரிமைகளை முதல்வர் பழனிசாமி டெல்லியில் அடகு வைத்துவிட்டார்: ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: தமிழக உரிமைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அடகு வைத்து விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம் செய்தார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுவதாவது;  பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் கொடுத்த மனுவில் இடம்பெற்றுள்ள 29 கோரிக்கைகள் புதிய மொந்தையில் பழைய கள் அடைக்கப்பட்டுள்ளதைத்தான் நினைவூட்டுகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் உணர்வுகளை நிதி ஆயோக் கூட்டத்தில் முனைப்புடன் எதிரொலிக்க தவறிவிட்டார். தமிழக உரிமைகளை டெல்லிக்கு தாரைவார்த்துவிட்டதாக முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். நீட் தேர்வு,மேகதாது அணை, மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ள மாநில நிதி அத்தனைக்கும் தீர்வு காண வாய்ப்பு கிடைத்தும் முதல்வர் தவறவிட்டுவிட்டார்.

தமிழகம் எங்கும் தவிக்கும் வாய்க்கு தண்ணீரின்றி மக்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள். டெல்லி சென்ற முதலமைச்சரரோ தமிழக மக்களுக்கு எந்தவித ஆக்கப்பூர்வ திட்டத்தையும் கேட்டு பெறவில்லை. டெல்லியில் தனது கட்சியின் சொந்த பஞ்சாயத்தை மட்டும் பேசிவிட்டு முதலமைச்சர் திரும்பிவிட்டர் எனவும் ஸ்டாலின் கடும் விமர்சனம் செய்தார். உள்ளாட்சி நிதி ஜி.எஸ்.டி.யால் வரிவருவாய் குறைந்ததற்கு இழப்பீடு வகையில் மத்திய அரசு ரூ.17,350 கோடி தரவேண்டியுள்ளது. மத்திய அரசு தரவேண்டிய ரூ.17,350 கோடி பற்றி டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பேச தவறிவிட்டார். வெறுங்கையுடன் டெல்லியில் இருந்து திரும்பியுள்ள எடப்பாடியை ஒருபோதும் மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

× RELATED முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்...