கடலோர பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நீரின்றி வறண்ட ஊற்றுக்கள், கிணறுகள்: ஒரு குடம் தண்ணீர் 10

மணமேல்குடி: கடலோர  பகுதிகளில் உள்ள ஊற்றுக்கள் மற்றும் கிணறுகள் நீரின்றி வற்றியதால்  கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள்  அவதிப்படுகிறன்றனர். தமிழகத்தில் எந்த வருடமும் இல்லாத அளவுக்கு  இந்த வருடம் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக   வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில்  பெரும்பாலான மாவட்டத்தில் நிலத்தடி நீர் குறைந்து இருக்கிறது. இதனால் பல  மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும்  அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த ஆண்டும் தமிழ்நாட்டின் பெரும்பாலான  மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. கஜா புயல்  காரணமாக சில மாவட்டங்களில் ஓரளவுக்கு மழை பெய்தது. கடந்த சில ஆண்டுகளாகவே  நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வந்த நிலையில் இந்த ஆண்டும்  வடகிழக்கு பருவ மழை போதிய அளவு இல்லாததாலும் நிலத்தடி நீர்மட்டம் மிகவும்  குறைந்துள்ளது. வறட்சி பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தில் பல பகுதிகளில்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குளங்களும், ஏரிகளும்  வறண்டு காணப்படுகின்றன. கோடை வெயில் கடுமையாக இருப்பதாலும், போதிய மழை  இல்லாததாலும் விவசாய நிலங்களும் வறண்டு விவசாயிகள் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளனர்.
கால்நடைகளும் குடிநீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளன.  மாவட்டத்தின் கடலோர பகுதியான கட்டுமாவடி முதல் ஏனாதி வரையான பல  கிராமங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. குறிப்பாக மக்கள்  தொகை அதிகமுள்ள மணமேல்குடியில் குடிநீர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது.  

இப்பகுதிகளில் பல இடங்களில் வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே  பைப் லைன் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அந்தத் தண்ணீரும்  குடிப்பதற்கு ஏதுவாக இல்லாததால் அதை வீட்டு உபயோகத்திற்கு  பயன்படுத்துகின்றனர். பல பகுதிகளில் கிராம பஞ்சாயத்துக்களில் சரியாக  தண்ணீர் திறந்து விடுவது கிடையாது. மேலும் குடிதண்ணீருக்காக மினி  டெம்போவில் வரும் குடி தண்ணீரை ஒரு குடம் பத்து ரூபாய் என்று வாங்கும் நிலை  ஏற்பட்டுள்ளது. கட்டுமாவடி, காரக்கோட்டை, பிள்ளையார்திடல், மணமேல்குடி,   அம்மாப்பட்டினம், விச்சூர் போன்ற பகுதிகளில் உள்ள ஆழ்குழாய் கிணறு மூலம்  தண்ணீர் எடுக்கப்பட்டு அதை மினி டெம்போவில் விற்பனை செய்கின்றார்கள். இந்த  தண்ணீர் ஒரு குடம் பத்து ரூபாய்க்கு விற்பனை ஆகின்றது. தற்போது நிலத்தடி  நீர்மட்டம் வெகுவாக குறைந்து ஆழ்துளை கிணற்றில் நீர் வற்றி உள்ளதால் இந்த  தனியார் குடிநீர் விற்பனை நிலையங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வாகனங்களும் சரியாக வருவதில்லை. இதனால்  பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீமிசல், அரசநகரிப்பட்டினம்,  முத்துக்குடா,  ஆர்.புதுப்பட்டினம் போன்ற பகுதிகளிலும் கடும் வறட்சி  நிலவுகிறது.

இந்த பகுதிகளில் கடலோரப் பகுதிகளில் கிணறு போன்ற சிறிய வகையான  ஊற்றுக்கள் அதிகமாக உள்ளன. தண்ணீர் பிடிக்க சுமார் மூன்று கிலோ மீட்டர்  தூரம் வரை மக்கள் நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த ஊற்றுகளிலும்  தண்ணீர் வற்றி உள்ளது. தண்ணீர் உருவாவதற்கு நீண்ட மணி நேரம் காத்திருக்க  வேண்டியுள்ளது. நீண்ட நேரத்திற்கு பிறகு தண்ணீர் ஊறிய பிறகு அந்த தண்ணீரை  பிடிக்க பெண்கள் போட்டி போடுகின்றனர். இந்த கடுமையான வெயில் நேரத்தில்  நீண்ட நேரம் காத்திருந்து தண்ணீர் பிடிக்க வேண்டியுள்ளது. இதனால் சில  பெண்கள் மயக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு   இப்பகுதிகளில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கவும், நிலத்தடி நீரைச்  சேமிக்கவும் விரைந்து நடவடிக்கை எடுத்து மக்களுக்கு இலவசமாக சுத்தமான  குடிநீரை வினியோகம் செய்ய வேண்டும். கிராம பஞ்சாயத்துகளில் தினமும் தண்ணீர்  திறந்துவிட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.Tags : areas ,Dry Fountains , Drinking ,water shortages,10 pitchers , water
× RELATED சதாப்தி ரயிலில் குடிநீர் இனி அரை லிட்டர் தான்