×

முல்லைப் பெரியாறு-அலட்சியத்தால் பாதித்த கண்மாய் நீர் சேமிப்பு சங்கிலி தொடர் கண்மாய் இணைப்பு காலத்தின் கட்டாயம்: இனியாவது அரசு உணருமா?

சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, நெல்லை, குமரி போன்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தேனி மாவட்ட எல்லைப் பகுதியில் கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  முல்லைப் பெரியாறு பாசனம் ஏற்பட்ட பின்னர் வைகை ஆற்று வடிநிலத்தின் கண்மாய்கள் நீர்வளம் மிக்கவையாக மாறின. இதனால், அப்போதைய மதுரை, இராமநாதபுரம் (தற்போதைய தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம்) ஆகிய மாவட்டங்கள் பலன் பெற்றன. இந்த நிலை சுதந்திரம் பெற்ற சிறிது காலம் வரைதான் நீடித்தது. வைகை அணை கட்டப்பட்டதும், அதன் பின்பும் வந்த பசுமைப் புரட்சியும், கண்மாய் பாசனங்களுக்கு வேட்டு வைத்துவிட்டன.உதாரணமாக, நிலக்கோட்டை தாலுகாவில் அணைப்பட்டி (பேரணை மதகு) நீரை கண்மாய்களுக்கு திருப்பிவிடும் பிரதான பணியை மேற்கொண்டிருந்தது. நாளடைவில் கான்கிரீட் நீரோடை மூலம் பிரிக்கப்பட்டு பாரம்பரிய கண்மாய் பாசனம் துண்டானது. மஞ்சளாறு தண்ணீரை அணைப்பட்டிக்கு மேலே கூட்டாத்து அய்யம்பாளையத்தில் பிரித்து ஆலங்குளம் என்ற 20 ஏக்கர் பரப்பளவில் கண்மாயில் நீரைத் தேக்கி பின்பு சிறுகுளம் நிரம்பி பின்பு ஆவம்பட்டி கண்மாய் (200 ஏக்கர்) சென்றடைந்து இறுதியில் மட்டப்பாறை கண்மாயை (400 ஏக்கர்) அடைகிறது. ஆவரம்பட்டி கண்மாய்க்கு நிலக்கோட்டை மன்னவராதி கண்மாய்களின் நீர்வரத்து வந்துள்ளது. மேலும் சிறுமலையிலிருந்து பள்ளப்பட்டி கண்மாயில் தேங்கிய நீர் மட்டப்பாறை கண்மாயை வந்தடைந்துள்ளது.

தொடர் சங்கிலி போன்ற பிணைப்பால் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் நேரடியாக ஒரு போக நன்செய் சாகுபடியும் சுமார் 3000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் மறைமுக புன்செய் சாகுபடியும் நடந்துள்ளன. அரசின் அலட்சியம் காரணமாக சரிவர பராமரிப்பு செய்யாததால் நீர்வரத்து கால்வாய்கள் அடைபட்டும் சீமைக் கருவேலி படர்ந்து கண்மாய் தொடர் சங்கிலி கட்டமைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஆலங்குளம், சிறுகுளம், சித்தர்கள் நத்தம், எத்திலோடு, ஆவாரம்பட்டி மற்றும் மட்டப்பாளை கண்மாய்கள் முட்புதர் மண்டி உள்ளன.மட்டப்பாறை, பிள்ளையார்நத்தம், கண்மாய்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கோரப் பிடியால் பாதிக்கு மேற்பட்ட கண்மாய் தண்ணீர் சேமிப்பு பகுதிகள் விவசாய நிலமாக மாறப்பட்டுள்ளன. கரைகள் உடைந்து சரியாக சீரமைக்காமல் கண்மாய், இருந்த சுவடு தெரியாமல் அழிந்து வருகின்றன. மஞ்சளாறு நீர்வரத்து பாதையிலிருந்து பிரியும் வாய்க்கால் 1992ல் அரசால் வைகை முதல் அணைப்படி வரை கொண்டு வந்த கான்கிரீட் வாய்க்காலால் தடைப்பட்டுள்ளது.

இதனால், நீர்வரத்து கால்வாய் (மஞ்சளாறு) பள்ளமாகவும் நீர் செல்லும் கால்வாய் (கண்மாய் பாசனத்துக்கு) மேடாகவும் மாறிவிட்டது. இப்பகுதி விவசாயிகளின் பெரும் போராட்டத்திற்கு பின்பு 11வது மடையில் கான்கிரீட் கால்வாயிலிருந்து நீரை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினாலும், நீர்வரத்து மிக குறைவாகவே உள்ளது. பசுமைப் புரட்சியால் பாரம்பரிய நீர் சேமிப்பு முறைகள் நிர்மூலமானதையும் தொடர் சங்கிலி நதி மற்றும் கண்மாய் பாசனப் பிணைப்புகள் துண்டாக்கப்பட்டதையும் தெரிந்து கொள்ள முடிந்தது என்று விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர்.

* ஆக்கிரமிப்புகளால் கண்மாய் நீர் சேமிப்பு பகுதிகள் விவசாய நிலமாக மாறப்பட்டுள்ளன. கரைகள் போதிய பராமரிப்பு இல்லாததால் கண்மாய் இருந்த சுவடு தெரியாமல் அழிந்து வருகின்றன.
* போதிய திட்டமிடல் இல்லாமல் கான்கிரீட் வாய்க்கால் போட்டதால் கண்மாய்க்கு நீர் வரத்து தடைபட்டது.
* பசுமைப் புரட்சியால் பாரம்பரிய நீர் சேகரிப்பு முறைகள் நிர்மூலமானதையும் தொடர் சங்கிலி நதி மற்றும் கண்மாய் பாசனப் பிணைப்புகள் துண்டானதுதான் எதார்த்த நிலை.



Tags : companion ,Mullai Periyar ,state , Water savings , Mullaperiyar-neglected,hereafter, government realize?
× RELATED முல்லைப் பெரியாறில் வாகன...