×

மழை நீரை சேகரிக்காவிட்டால் இனி அவ்ளோதான்... 2015ல் சென்னையை மூழ்கடித்த செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது

காட்டாற்று வெள்ளம்போல் பாய்ந்து வந்து கடந்த 2015ம் ஆண்டு சென்னை நகரை மூழ்கடித்து, பல நூறு பேர் மரணத்துக்கு காரணமான செம்பரம்பாக்கம் ஏரி தான் சென்னை நகரின் முக்கியமான குடிநீர் ஆதாரமாகும். இந்த செம்பரம்பாக்கம் ஏரி  இப்போது முற்றிலும் வறண்டு, நிலங்கள் வெடித்து பாளங்களாக காட்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீர் முழுவதுமாக நிரம்பி காணப்பட்டது. எப்போதும் நீரோட்டம் நிறைந்து காணப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி தற்போது முற்றிலும் வறண்டுவிட்டது. இந்த ஏரியை பொறுத்தவரையில் சுமார் 10 கிலோ மீட்டர்  சுற்றளவு நீளம் கொண்ட மிகப்பெரிய ஏரியாகும். 19 சிறிய மதகுகள் வழியாகவும். 5 பெரிய மதகுகள் வழியாகவும் நீர் வெளியேற்றப்படும். அதன்பிறகு சென்னையின் குடிநீருக்கு தண்ணீர் எடுப்பார்கள்.
2018ம் ஆண்டு பருவ மழை பொய்த்ததால் இப்போது முற்றிலும் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டு சென்னையில் மிகப்பெரிய அளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

3,640 கனஅடிநீரை தேக்கும் வசதி கொண்ட இந்த ஏரியில் ஒரு அடி  தண்ணீர் கூட தற்போது இல்லை.செம்பரம்பாக்கம் ஏரியை தூர்வார தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஏரியை தூர்வாரினால் ஏராளமான தண்ணீரை சேமிக்க முடியும் என மக்கள் சொல்கிறார்கள். இதேபோல் கால்வாய்களை புனரமைத்தால் தண்ணீர் சேமிப்பை அதிகரிக்க  முடியும் என்றும் மக்கள் கூறுகிறார்கள்.நேற்று காலை 9 மணி நிலவரப்படி, பூண்டி ஏரியில் முழு கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில், 28 மி. கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. புழல் ஏரியில் முழு கொள்ளளவான 3,300 மி.கன அடியில் 2 மி.கன அடியும், சோழவரம்  ஏரியில் முழு கொள்ளளவான 1,081 மி.கன அடியில் ஒரு மி.கன அடியும் நீர் இருப்பு உள்ளது. இந்த நீரும் கடும் வெயிலினால் ஆவியாகி குறைந்து வருகிறது. இதனால் இன்னும் சில நாட்களில் மழை பெய்யாவிட்டால் சென்னையில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் மடிவதை யாராலும் தடுக்க முடியாது என்கிறார்கள்.

15 ஆண்டுக்குப் பிறகு வறண்டது
 செம்பரம்பாக்கம் ஏரி 6,303 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி, 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. ஏரியின் நீர்மட்டம் 24 அடியாகும். காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இந்த ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை நம்பி, 38 கிராமங்களில் விவசாயம் நடைபெற்று வந்தது. குடிநீர்த் தேவைக்காக ஏரி நீர் பயன்படுத்தப்படுவதால், தற்போது திருமுடிவாக்கம்,  நந்தம்பாக்கம், பழந்தண்டலம், சிறுகளத்தூர் ஆகிய ஊர்களில் 1,000 ஏக்கர் விவசாயத்துக்கு மட்டுமே, தண்ணீர் வழங்கப்படுகிறது.கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால் குடிநீர் ஏரிகளில் நீர் நிரம்பவில்லை. இதன் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியில், நீர்மட்டம் குறைவாகவே இருந்தது. கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு தற்போது வறண்டு கிடக்கிறது.  இதையடுத்து கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் எடுப்பது நிறுத்தப்பட்டது.செம்பரம்பாக்கம் ஏரியை ரூ.191 கோடிக்கு முழுவதுமாக தூர்வாரி, ஆழப்படுத்த கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி 6,303  ஏக்கர் பரப்பளவிற்கும், ஒரு மீட்டர் ஆழத்துக்கும் தூர்வாரப்படும். ஆறு ஆண்டுகள் இந்தப் பணிகள் நடைபெறும்.

ஒரே நேரத்தில், முழு பரப்பளவிலும் தூர்வார முடியாது என்பதால், பகுதி பகுதியாக பணி மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டத்தின் படி, மொத்தம் ஒரு கோடியே, 51 லட்சத்து, 80 ஆயிரத்து, 423 கன மீட்டர் மண் எடுக்கப்படும். இதன் மூலம்,  ஏரியின் முழு கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடிக்கு மேல் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும்.கோடை காலத்தில், கூடுதலாக சில மாதங்களுக்கு, சென்னைக்கு தண்ணீர் வழங்க முடியும். எதிர்வரும் பருவ மழையினால் பெறப்படும் நீரை சேமிக்க செம்பரம்பாக்கம் ஏரியிலும் அதிக நீரைத் தேக்கி வைக்கும் வகையில் பராமரிப்பு பணிகள்  விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரி சென்னையில் இருந்து சுமார் 30 கி.மீ., தொலைவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரியாகும். சென்னை நகரின் குடிநீர்த் தேவைகளுக்குப் பயன்படும் தலையாய ஏரிகளில் ஒன்றான இந்த ஏரியில் இருந்து அடையாறு நதி  பிறக்கின்றது.
இந்த ஏரியானது 500 ஆண்டுகள் பழமையானது. இதன் அப்போதைய நீர்மட்டம் 19.5 அடியாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நீர்மட்டம் 22 அடியாக உயர்த்தப்பட்டது. பின்னர் தெலுங்கு கங்கைத் திட்டத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து  வரும் நீரைத் தேக்கி வைப்பதற்காக இதன் நீர்மட்டம் 24 அடியாக உயர்த்தப்பட்டது.

இந்த ஏரியின் கரை 9 கி.மீட்டர் நீளம் உடையது. ஏரியில் 19 சிறிய மதகுகள், 5 பெரிய மதகுகள், 2 கலங்கல் (ஆயிரம் அடி நீளத்தில் தானாக உபரிநீர் வெளியேறும் பகுதி) ஆகியவற்றைக் கொண்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில்  இதுதான் பெரிய ஏரி. 85.4 அடி உயரம் கொண்ட இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 364.5 கோடி கன அடி (3,645 மில்லியன் கன அடி) ஆகும்.

Tags : rain water,,Chennai in 2015, Sembarampakkam , dry
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...