போலீசுக்கு ‘தண்ணி’ காட்டிய குட்டீஸ்

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவியில் கடந்த வாரம் புதிய சைக்கிள் ஒன்று திருடு போனது. இதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் போலீசாரும் விறுவிறு விசாரணையில் இறங்கினர். விசாரணையில் 12 வயதிற்கு உட்பட்ட 3 சிறுவர்கள்  சேர்ந்து சைக்கிளை திருடி விற்றது தெரியவந்தது. போலீசாரும் அந்த சிறுவர்களை அழைத்து விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்து போலீசாரை கிறங்கடித்தனர்.சம்பந்தமேயில்லாத இரும்பு வியாபாரிகளை கைகாட்டி இவரிடம் தான் விற்றோம் என்றனர். பின்னர் சைக்கிளை ஒளித்து வைத்துள்ள இடத்தை காட்டுவதாக கூறி 18 கி.மீ., தூரமுள்ள பேட்டையை அடுத்த திருப்பணிகரிசல்குளத்திற்கு  போலீசாரை அழைத்துச் சென்று தெரியாத ஒரு வீட்டை காட்டி அங்கு தான் வைத்தோம் என்றனர். அங்கு சென்ற போலீசார் ஏமாற்றத்தால் மீண்டும் விசாரிக்க சுவரில் அடித்த பந்தாக சங்கன்திரடு கிராமத்தில் ஒரு வைக்கோல் படப்பினுள்  ஒளித்து வைத்துள்ளதாக கூறினர்.

போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சிறுவர்கள் கூறிய இடத்தில் வைக்கோல் படப்பே இல்லை. இப்படி சைக்கிள் உள்ளதாக கூறி 50 கி.மீ., தூரம் சிறுவர்கள் விடாமல் போலீசுக்கு தண்ணி காட்டினர். கடைசி வரை சைக்கிளை எப்படி  திருடினீர்கள் என போலீசார் கேட்க அவர்கள் பயமின்றி கூறியது சிரிக்கவா....அழவா என்ற ரேஞ்சுக்கு செல்ல விசாரணையை முடித்துக் கொண்ட போலீசார் சிறுவர்களை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி விட்டனர்.


Tags : Kuttis , Kuttis, phone, police
× RELATED ஹாங்காங் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு