×

கர்நாடகா, ஆந்திராவை போன்று தமிழகத்திலும் கிராம சபை, கிராம பஞ்சாயத்து மூலம் மணல் விற்பனை: முதல்வருக்கு மணல் லாரி உரிமையாளர்கள் யோசனை

சென்னை: கர்நாடகா மற்றும் ஆந்திராவை போன்று தமிழகத்திலும் அந்தந்த கிராம சபை அல்லது கிராம  பஞ்சாயத்து மூலம் மணலை வழங்கினால் மக்களுக்கு  மணல் தங்குதடையின்றி கிடைக்கும் என்று மணல் லாரி உரிமையாளர்கள்  முதல்வருக்கு யோசனை வழங்கியுள்ளனர்.தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:தமிழகத்தில் 56 மணல் குவாரிகள் இயங்கிவந்த நிலையில் தற்போது 2 குவாரிகள் மட்டுமே இயங்குகிறது. இதனால் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மணல் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. அதற்கு மாற்றாக எம்-சாண்ட் அதிகளவில்  பயன்படுத்தப்படுகிறது.கடந்த ஒரு வருடத்தில் புதிய மணல் குவாரிகள் விரைவில் திறக்கப்படும் என முதல்வர் பலமுறை அறிவிப்பு செய்துள்ளார். ஆனால் இதுநாள் வரையில் புதிய மணல் குவாரிகள் திறக்கப்படவில்லை. மணல் விநியோகத்திற்கு தனி ஐஏஎஸ்  அதிகாரியை நியமித்தும் தினசரி 100 லோடுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் தினசரி 20 ஆயிரம் லோடு மணல் திருடப்படுகிறது.

கட்டுமானப்பணிக்கு அரசு கப்பல் மூலம் மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்து, ₹10,350க்கு விற்கப்படுகிறது. ஏற்கனவே ஆற்று மணலை அரசு யூனிட் ₹1,350க்கு விற்றுவந்த நிலையில், மலேசிய மணலை பலமடங்கு அதிக  விலைக்கு விற்று வருகிறது.
கட்டுமான பணிக்கு தேவையான அத்தியாவசிய பொருளான மணல் தட்டுப்பாட்டினால், தமிழகத்தில் ஒட்டுமொத்த கட்டுமான பணியும் முடங்கும் அபாயம் உள்ளது. இதனால் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படும். மணல் லாரி  தொழிலை நம்பி 10 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.மணல் தட்டுப்பாட்டினை சாதகமாக பயன்படுத்தி தினசரி அதே அளவில் கலப்பட மணலை முறைகேடாக சமூகவிரோதிகள் மக்களுக்கு விநியோகித்து வருகின்றனர். கனிமவளத்தை காக்கும் பொருட்டு, அண்டை மாநிலங்களான கர்நாடகா  மற்றும் ஆந்திராவை போன்று தமிழகத்திலும் அந்தந்த கிராம சபை அல்லது கிராம பஞ்சாயத்து மூலம் மணலை வழங்கினால் கனிமவளம் காக்கப்படும். மக்களுக்கும் மணல் தங்குதடையின்றி கிடைக்கும்.

தற்போது வறட்சி ஏற்பட்டுள்ளதால் பல அணைகளில் தேங்கியுள்ள மணலை எடுத்து விற்பனை செய்ய அரசு பரிசீலிக்க வேண்டும். மணல் விநியோகம் குறித்து மணல் லாரி உரிமையாளர்கள், பில்டர்ஸ் அசோசியேஷன் கட்டுமான  பொறியாளர்கள் சங்கங்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் சங்கங்கள் ஆகியவை சேர்ந்து நேரில் விளக்கம் அளிக்கும் வகையில், எங்களுக்கு முதல்வர் நேரம் ஒதுக்கி தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : Sand ,Gram Sabha ,Gram Panchayat ,Andhra Pradesh ,Karnataka , Like Karnataka, Andhra Pradesh ,sand truck, time
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்