தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இந்தி திணிப்பு: மத்திய அரசின் உத்தரவுக்கு வைகோ கண்டனம்

சென்னை: தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இந்தியில் மட்டுமே வாக்கியங்கள் இடம் பெற வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு வைகோ கடும் கண்டனம் ெதரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:நாடாளுமன்றத் தேர்தலில் ‘மிருக பலத்துடன்’ வெற்றி பெற்று ஆட்சிப்பீடத்திற்கு வந்து விட்டதால் தாங்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றி விட வேண்டும் என்று பாஜ ஆட்சியாளர்கள் துடிக்கின்றனர். இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழகம்  மட்டுமின்றி தென் மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்டவை போர்க்கோலம் பூண்டு இருக்கின்ற நேரத்தில் மீண்டும் மீண்டும் பாஜ அரசு இந்தி மொழியைத் திணிப்பதற்கான வேலையை மூர்க்கத்தனத்துடன் செய்து வருகிறது.மும்மொழிக் கொள்கையைக் கொண்டு வந்து இந்தியை விரும்பும் மாணவர்கள் கற்க ஏற்பாடு; இரயில்வே துறையில் தகவல் பரிமாற்றத்தில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்படல் வேண்டும்; தமிழ் மொழியில் அறவே உரையாடக்  கூடாது என்று சுற்றறிக்கை.

தற்போது மேலும் ஒரு கேடாக, தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் நாடகம், திரைப்படம் உள்ளிட்டவற்றில் இடம் பெறும் காட்சிகளின் உரையாடல்கள் இந்தி மொழியில் வாக்கியங்களாக திரையில் இடம்பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று  உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. பாஜ அரசின் இந்நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது. மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்தத் தகவலைத் தெரிவித்து இருப்பதுடன், இந்திய மொழியான ‘இந்தி’யைத்  தொலைக்காட்சிகள் அனைத்து மாநிலங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.அரசியலமைப்புச் சட்டத்தில் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுமே ‘இந்திய மொழிகள்’ என்பதை முதலில் மத்திய அரசு ஏற்க வேண்டும். ‘இந்தி’ மட்டுமே இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்று கட்டாயமாக்குவது,  அதிகாரத்தின் துணைகொண்டு திணிப்பது நாட்டின் பன்முகத் தன்மையைச் சீர்குலைக்குமே தவிர, இந்தி ஒருபோதும் ‘இந்தியா’வை ஒன்றிணைக்காது என்பதை பா.ஜ.க. அரசு புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் அதற்கான விலையைக்  கொடுக்க வேண்டியது இருக்கும் என்பதைக் கவனப்படுத்துகிறேன். தொலைக்காட்சிகளில் இந்தி மொழியைத் திணிக்கும் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: