×

குடிநீர் தட்டுப்பாட்டால் திணறுகிறது சென்னை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தொடரும் அவலம்

சென்னை: கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சென்னை குடிநீர் வாரியத்திற்கு அரசு ஒதுக்கிய ₹122 கோடியை வைத்து எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை மாநகரம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம்  ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை மக்கள் அன்றாட வாழ்க்கையை மேற்கொள்ள முடியாமல் திணறிவருகிறார்கள். கோடை காலத்தில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு வரும் என்று அரசுக்கு தெரியும். தமிழகத்தில் பருவகால மழை தொடர்ந்து ஏமாற்றம் அளித்துள்ளதால் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க அரசு போர்க்கால  அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.   கடந்த ஜனவரியில் தலைமைச் செயலகத்தில் நடந்த முதல்வர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் கோடையை சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்று பேசப்பட்டது. அதன் அடிப்படையில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை  சமாளிக்க ₹122 கோடி ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  ஆனால், குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்யும் நடவடிக்கையை அரசு தொடங்கவேயில்லை.  இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள்  அமலுக்கு வந்ததால் குடிநீர் பற்றாக்குறையை பற்றி அரசு கவலைப்படவில்லை.

 இதனால் சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. சென்னையில் ஒவ்வொரு தெருவிலும் ஒரு குடிநீர் டேங்க் வைக்கப்பட்டிருந்தும் அதில் தண்ணீர் நிரப்பப்படுவதில்லை. ஒரு நாள்விட்டு ஒரு நாள் கூட தண்ணீர் நிரப்பப்படுவதில்லை. சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகள் அரசு அதிகாரிகள்  மற்றும் லோக்கல் அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்வதற்கு தரும் முன்னுரிமை பொதுமக்களுக்கு தரவில்லை என்று பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.  தெருவில் உள்ள டேங்குகளுக்கு தண்ணீர்  விடப்பட்டால் ஒரு சில நிமிடங்களிலேயே தீர்ந்துவிடுகிறது. போட்டி போட்டுக்கொண்டு தண்ணீர் பிடிப்பதால் பெரும்பாலான இடங்களில் தகராறுகள் ஏற்படுகின்றன.

 அதுமட்டுமல்லாமல் தண்ணீர் நிரப்பும் பம்பிங்க் நிலையத்திற்கு பொதுமக்கள் காலி குடங்களில் நேரடியாக படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆட்டோக்கள், கார்களை வாடகைக்கு பிடித்து தண்ணீர் கேன்களில் நிறைத்து வீட்டுக்கு  எடுத்துச்செல்கிறார்கள்.
 ஒரு லாரி தண்ணீர்விலை ₹8 ஆயிரம் வரை வந்துவிட்டது. சாதாரண மக்களால் இவ்வளவு விலை கொடுத்து தண்ணீரை வாங்குவது இயலாத காரணம். சென்னையில் பலர் தங்கள் குடும்பங்களை சொந்தக் கிராமங்களுக்கு அனுப்ப முடிவு  செய்துள்ள ஒரு வருத்தமான தகவல்களும் வெளிவந்துள்ளன.இதே நிலை நீடித்தால் ஊரை காலிசெய்ய வேண்டியதுதான் என்று பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.


Tags : Chennai , Drinking water,Chennai, Failure, precautions ,continue
× RELATED சிறுணை கிராமத்தில் ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு: கிராம மக்கள் புகார்