×

வடகிழக்கு பருவமழை பொய்த்து போகும் என எச்சரிக்கை விடுத்தும் மாற்றுத்திட்டத்தை செயல்படுத்தாத தமிழக அரசு

* குடிக்க தண்ணீரின்றி தவிக்கும் பொதுமக்கள் * குளிக்க, பல் துலக்க முடியாமல் அலுவலகம் செல்லும் அவலம்

சென்னை: வடகிழக்கு பருவமழை பொய்த்து போகும் என எச்சரிக்கை விடுத்தும் மாற்றுத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தாமதித்தன் விளைவாக பொதுமக்கள் குடிநீருக்காக அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் குறைவாகவே மழை பொழிவு இருக்கும் என்று கடந்தாண்டு இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படியே கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை  எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை பொய்த்து ேபாய் விடும் என்ற சூழ்நிலையில் கடந்தாண்டு தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு மாற்று நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்.  ஆனால், அவ்வாறு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. தாமதமாக நிதி ஒதுக்கிய தமிழக அரசுஇந்த நிலையில் கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு தான் தமிழக அரசு சார்பில் ₹152 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியை கொண்டு கல்குவாரிகளில் தண்ணீர் எடுத்து விநியோகிப்பது, பாசனத்திற்கு பயன்படாத ஏரிகளில் தண்ணீர்  எடுப்பது உள்ளிட்ட மாற்றுத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது. இருப்பினும் கடந்த ஜனவரியில் ஏரிகளில் குறைந்த அளவே தண்ணீர் இருந்த சூழ்நிலையில், சென்னை மாநகர் குடிநீர் தேவைக்கு 450 மில்லியன் லிட்டர் மட்டுமே தண்ணீர்  விநியோகம் செய்தது. குறிப்பாக, சென்னை மாநகருக்கு 800 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் சூழ்நிலையில், அதை விட குறைவாகவே திறக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளானார்கள். இந்த நிலையில்  ஏரிகளில் நீர் மட்டம் குறைந்து வரும் சூழ்நிலையில் கடந்த மே மாதம் முதல் தண்ணீர் விநியோகம் 220 மில்லியன் லிட்டராக குறைந்து விட்டது. இதனால், குடிநீர் மட்டுமின்றி பிற தேவைகளுக்கு தண்ணீர் கிடைக்காத சூழல் உருவானது.

இந்த  நிலையில், தற்போது ஏரிகள் முழுவதும் வறண்டு விட்ட நிலையில் கல்குவாரி, கடல் நீரை குடிநீராக்கும் நிலையம், விவசாய கிணறுகள் மூலம் தண்ணீர் பெறப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர்த்து வீராணம் ஏரியில் இருந்தும்  தண்ணீர் எடுத்து வரப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. பாசனத்திற்கு பயன்படாத ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கும் திட்டப்பணிக்கான வேலை இப்போது தான் நடக்கிறது. இந்த பணிகள் முடிய இன்னும் 6 மாதங்கள் வரை ஆகும். இதனால்,  அங்கிருந்து இப்போதைய தேவைக்கு தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஒரு குடும்பத்திற்கு 2 குடம் தண்ணீர்:இந்த நிலையில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் தண்ணீர் இல்லாத நிலையில், கல்குவாரிகளில் தண்ணீர் குறைந்து வருவதாலும் தற்போது சென்னை மாநகர குடிநீர் ேதவைக்காக 200 மில்லியன் லிட்டர் கூட  விநியோகிக்க முடியவில்லை. இந்த  தண்ணீர் கூட 5 முதல் 6 நாட்களுக்கு ஒரு முறை தான் விநியோகிக்க முடிகிறது. பைப் லைனில் தண்ணீர் விநியோகிக்க முடியாத நிலையில் டேங்கர் லாரியில் வாரத்திற்கு ஒரு முறை தான் தர  முடிகிறது. இந்த  லாரி மூலம் 2 குடங்கள் வரை மட்டுமே ஒரு குடும்பத்திற்கு தரப்படுகிறது. இந்த தண்ணீர் குடிப்பதற்கு கூட போதவில்லை. இதனால், டேங்கர் லாரி எப்போது வரும் என்று காத்துக்கிடக்கின்றனர்.

நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் அடிப்படை தேவைக்கு தண்ணீர் இல்லை:சென்னை மாநகரில் நிலத்தடி நீர் மட்டமும் முற்றிலும் வறண்டு போய் விட்டது. குறிப்பாக, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தி.நகர், கோடம்பாக்கம், வடபழனி, அடையாறு, திருவான்மியூர், சைதாப்பேட்டை வேளச்சேரி, கோயம்பேடு, அண்ணா  நகர், தண்டையார் பேட்டை, ஆர்.கே.நகர், மாதவரம், ராயபுரம், கிண்டி உள்ளிட்ட மாநகர் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் வறண்டு போய் விட்டது.  இதனால், போர்வெல் மூலம் கூட தண்ணீர் பெற  முடியவில்லை. இதனால்,  குடிப்பதற்கு, குளிப்பதற்கு மற்றும் இதர தேவைகளுக்கு பொதுமக்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.  தண்ணீரின்றி குளிக்க முடியாமல் அலுவலகத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளி, கல்லூரிகளில் குடிநீர் மற்றும் இதர  தேவைகளுக்கு தண்ணீர் இல்லாத சூழ்நிலையில் அவர்களும் விடுமுறை விட முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

பணம் கொடுக்க தயாராக இருந்தும் கிடைக்காத டேங்கர் லாரி தண்ணீர்:போரூர், வளசரவாக்கம், அய்யப்பன்தாங்கல், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் குடிநீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. மாநகராட்சி, மற்றும் ஊராட்சி நிர்வாகங்களிலிருந்து விநியோகிக்கப்படும் தண்ணீர் போதுமானதாக இல்லை. குடிப்பதற்கு  கேன் தண்ணீர் வாங்கி சமாளித்தாலும், மற்ற பயன்பாட்டிற்கு தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பல இடங்களில் போர்வேல் போட்டும் தண்ணீர் இல்லை. இதனால் அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள்  தங்களுக்குள் பணம் வசூலித்து மொத்தமாக லாரி தண்ணீர் வாங்க முயற்சி செய்தாலும் அவர்களுக்கு உடனடியாக தண்ணீர் கிடைப்பதில்லை. பூந்தமல்லி பகுதியில் வேகமாக குறையும் நிலத்தடி நீர்மட்டம்:
பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டதால் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் ஆழ்துளை குழாய் கிணறுகளை ஆழப்படுத்தி வருகின்றனர். இதற்காக போர்வெல் போடுபவர்களிடம் முன்பதிவு  செய்து போர்வெல் போட்டு வருகின்றனர். பூந்தமல்லி பைபாஸ் சாலையோரம் உள்ள பகுதிகள், சென்னீர்குப்பம், பாரிவாக்கம், பானவேடு தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக அனுமதியின்றி தனியார் நிலங்களில் ஆழ்துளைக்  கிணறுகள் அமைத்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு தனியார் லாரிகள் மூலம் சென்னையில் உள்ள நிறுவனங்கள், குடியிருப்புகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் இந்தப் பகுதியில் வேகமாக நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் குறைந்து  வருகிறது. அதிகாரிகள் இதைப்பற்றி கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

குடிநீரை தேடி அலையும் மதுராந்தகம் மக்கள்:மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்டது மங்களம் ஊராட்சி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மங்கலம் கிராமம் மற்றும் நெல்வாய் கூட்ரோடு பகுதிகளில் தற்போது கடுமையான குடிநீர் பற்றாக்குறை  நிலவுகிறது. இதனால் வயல் வெளி கிணறுகளுக்கு சென்று பெண்கள் தண்ணீர் எடுத்து வந்து சமாளிக்கின்றனர். உவர் நீராக மாறும் நிலத்தடி நீர் மட்டம்:திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியானது கோட்டைக்குப்பம், லைட் ஹவுஸ், தாங்கல், பெரும்புலம், பழவேற்காடு உள்ளிட்ட நான்கு ஊராட்சிகளை கொண்ட பகுதியாகும். மெதூர் ஊராட்சிக்குட்பட்ட ஏரி பகுதிகளிலிருந்து பழவேற்காடு  பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. பின்னர் நாளடைவில் தண்ணீர் உவர் நீராக மாறி விட்ட  காரணத்தினால் பொன்னேரி அருகே உள்ள சின்னகாவனம் பகுதியிலிருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம்  தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு ஒரு பஞ்சாயத்து என சுழற்சி முறையில் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அதிலிருந்து ஒவ்வொரு கிராமத்திற்கும் பெருவாரியாக தண்ணீர்  விடப்படுகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தி தான் இங்குள்ள மக்கள் குடிநீர் தேவைகள் மற்றும் சமையல் குளியல் உள்ளிட்ட  பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். காரணம் இந்த பகுதியில் கிடைக்கும் நிலத்தடி நீர் உவர் நீராக  இருப்பதால் கழிப்பறை உபயோகத்திற்கு மட்டும் நிலத்தடி நீரை சில வீடுகளில் மக்கள்  பயன்படுத்தி வருகின்றனர்.

போராட்டத்திற்கு தயாராகும் கிராம மக்கள்:தென்சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது போதிய அளவில் இல்லாததால் மக்கள் இரவு, பகல் பாராமல் குடங்களை சுமந்து கொண்டு அலையும் நிலை  ஏற்பட்டுள்ளது. தண்ணீர் சப்ளை செய்யும் லாரிகள் தங்களின் வாடகைத் தொகையையும், தண்ணீரின் விலையையும் உயர்த்தியுள்ளன.

Tags : Tamil Nadu ,government , Northeast, Monsoon Warns , Tamil Nadu , plan
× RELATED பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு