×

குடிநீர் தட்டுப்பாடு பள்ளிகளில் மாணவர்கள் கடும் அவதி: கழிவறைகளை மூடிய அவலம்

சென்னை: கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக  அரசு பள்ளிகளில் கை கழுவ கூட தண்ணீர் இல்லாமல் மாணவர்கள் திண்டாடி வருகின்றனர். கழிவறைகளும் மூடப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது.  அரசு பள்ளிகளுக்கு குடிநீர் வழங்க முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் திண்டாடிவருகின்றன. கிராம பகுதியில் உள்ள  பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அந்த பள்ளிகளில் குழாய் மூலம் வழங்கப்படும்  குடிநீரைத்தான் நம்பி உள்ளனர். இந்த தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர்விநியோகம் செய்யப்படுகிறது.  இதனால் கிராமப்புறத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் குடிக்க கூட குடிநீர் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.

பள்ளி நாட்களில் காலை இடைவேளை, மதியம் உணவு இடைவேளை, மாலை இடைவேளை ஆகிய நேரங்களில் தண்ணீர் அதிகமாக தேவைப்படும். இந்த நேரங்களில் மாணவர்கள் கை,கால் கழுவுவது, உணவு கொண்டுவிட்டு அந்த  பாத்திரங்களை கழுவுவது ஆகியவற்றுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மாணவர்கள் கை கழுவ கூட தண்ணீர் இல்லாமல் நீர் தொட்டிகள் அனைத்தும் காலியாக உள்ளன. மேலும் பள்ளிகளில் உள்ள  கழிவறைகளை கூட பயன்படுத்த முடியாத சூழ்நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தண்ணீர் இல்லாத காரணத்தால் பெரும்பாலான பள்ளிகளில் கழிவறைகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மாநகராட்சி  பள்ளிகளுக்கு குடிநீர் வாரியம்தான் தண்ணீர் விநியோகம் செய்கிறது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பள்ளிகளுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என சென்னை பள்ளி ஆசிரியர்கள்  தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இந்த பிரச்சனை தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் ஹரிஹரனிடம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை பள்ளிகளில் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க  குறைந்தது நாள் ஒன்றுக்கு 4 லட்சம் லிட்டர் குடிநீராவது வழங்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பள்ளிகளில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு  தொடர்பாக இன்று ஆலோசனை  கூட்டம்  நடைபெறவுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Tags : Drinking water ,schools, closure , toilets
× RELATED லேப்டாப் கேட்டு மாணவிகள் மறியல்