புளித்த தோசை மாவை திருப்பி கொடுத்ததால் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்: மளிகை கடைக்காரர் கைது

நாகர்கோவில்: புளித்துப்போன தோசை மாவை திருப்பிக்கொடுத்த எழுத்தாளர் ஜெயமோகனை மளிகை கடைக்காரர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் (60). பல்வேறு நாவல்கள், சிறுகதைகள் எழுதியுள்ளார். சர்க்கார், எந்திரன் உட்பட பல தமிழ், மலையாள திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். இவரது வீடு குமரி மாவட்டம், நாகர்கோவில், பார்வதிபுரம், சாரதா நகரில், கிராஸ் தெருவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் ஜெயமோகன் பார்வதிபுரத்தில் ஒரு மளிகை கடையில் தோசை மாவு வாங்கியுள்ளார். வீட்டில் சென்று பார்த்தபோது மாவு புளித்துப்போயிருந்துள்ளது. இதனையடுத்து ஜெயமோகன் மாவு பாக்கெட்டை திரும்ப கொடுக்க கடைக்கு வந்துள்ளார். அப்போது கடையில் உரிமையாளர் செல்வனின் மனைவி கீதா இருந்துள்ளார். அவர் மாவு பாக்கெட்டை திரும்ப வாங்க மறுத்து திட்டியுள்ளார். உடனே ஜெயமோகன் மாவு பாக்கெட்டை கடையிலேயே வீசிவிட்டு திரும்ப முயன்றுள்ளார். அப்போது அருகில் இருந்த செல்வன், ஜெயமோகனை திட்டி தாக்கியுள்ளார்.

Advertising
Advertising

இதுதொடர்பாக ஜெயமோகன் புகாரின்படி நேசமணிநகர் போலீசார் வழக்குபதிந்து செல்வனை கைது செய்தனர். காயமடைந்த ஜெயமோகன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை ஜெயமோகன் தனது இணையப்பக்கத்தில் பதிவிட்டு தனக்கு, நீதி கிடைக்குமென்று நம்புவதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே, செல்வத்தின் மனைவி கீதாவும் ஜெயமோகன் தன்னை தாக்கியதாக போலீசில் புகார் செய்துவிட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

Related Stories: