ரவுடி வல்லரசு என்கவுன்டர் தொடர்பாக விசாரணை அதிகாரியாக பொன்னேரி நீதிமன்ற நடுவர் விஜயலட்சுமி நியமனம்

சென்னை : சென்னையில் ரவுடி வல்லரசு என்கவுன்டர் தொடர்பாக விசாரணை அதிகாரியாக பொன்னேரி 2-ம் நீதிமன்ற நடுவர் விஜயலட்சுமி நியமிக்கப்பட்டார். முன்னதாக சென்னை வியாசர்பாடியில் பல கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி வல்லரசு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். வியாசர்பாடி எம்.என்.கார்டன் பகுதியில், பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டு வரும் ரவுடிகள் வல்லரசு உள்ளிட்டோர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல்நிலை காவலரான பவுன்ராஜ், சக காவலர்களுடன் சென்று ரவுடிகளை கைது செய்ய முயற்சித்துள்ளார். அப்போது கூட்டாளிகளுடன் இருந்த பிரபல ரவுடி வல்லரசு, காவலர் பவுன்ராஜை பயங்கர ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் காவல் ஆய்வாளர் பவுன்ராஜ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே சாய்ந்து விழுந்தார்.

இதனையடுத்து உடனடியாக காவலர்கள் எதிர்தாக்குதல் நடத்தினர். மாதவரம் பேருந்து நிலையம் அருகே கூட்டாளிகளுடன் பதுங்கியிருந்த வல்லரசை சுற்றி வளைத்த போது உதவி ஆய்வாளர்களை வெட்டி விட்டு தப்பிக்க முயன்றுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் 3 முறை துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி வல்லரசு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் பவுன்ராஜை மீட்ட காவலர்கள், அவரை ஸ்டான்லி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். இதனிடையே, தற்காப்புக்காகவே ரவுடி வல்லரசுவை சுட்டுக்கொன்றதாக தாக்குதலுக்குள்ளான காவல் ஆய்வாளர் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க விசாரணை அதிகாரியாக பொன்னேரி 2-ம் நீதிமன்ற நடுவர் விஜயலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ரவுடி வல்லரசுவின் தாய், தந்தை ஆகியோருடன் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், வல்லரசுவின் உடலை உடற்கூறாய்வு செய்த மருத்துவர் குழுவுடன் விசாரணை நடத்தினார்.

Related Stories: