பாதாம், அக்ரூட், ஆப்பிள், பியர்ஸ் பழம் உட்பட 29 அமெரிக்க பொருட்கள் மீது வரி

புதுடெல்லி: பாதாம், அக்ரூட் மற்றும் பருப்பு வகைகள் உட்பட 29 அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா இறக்குமதி வரி விதித்துள்ளது.   கடந்த ஆண்டு மார்ச் மாதம், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்டீலுக்கு 25 சதவீதம், அலுமினியத்துக்கு 10 சதவீதம் விதித்தது. அமெரிக்காவுக்கு ஸ்டீல், அலுமினிய பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வரி விதிப்பின் மூலம் இந்தியாவிடம் இருந்து அமெரிக்காவுக்கு 24 கோடி டாலர் வருவாய் கிடைக்கும். இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்க கடந்த ஆண்டு ஜூன் 21ம் தேதி வரி விதிக்க  மத்திய அரசு முடிவு செய்தது. இருப்பினும் பேச்சுவார்த்தை மூலம் வர்த்தக ரீதியாக இணக்கமான சூழல் ஏற்படும் என மத்திய அரசு எதிர்பார்த்தது.

ஆனால், கடந்த 5ம் தேதி வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை அமெரிக்கா நீக்கியது. இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 550 கோடி டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி பாதித்தது.

இதை தொடர்ந்து, தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையில் வரி விதிப்பு முடிவை ஒத்திப்போட்டு வந்த மத்திய அரசு, பதிலடி வரி விதிப்பை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதன்படி அக்ரூட் இறக்குமதிக்கு 30 சதவீதமாக இருந்த வரி 120 சதவீதமாக உயர்கிறது. கொண்டைக்கடலை, கடலைப்பருப்பு, மசூர் பருப்பு மீது வரி 30 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்கிறது.

பயறு வகைகள் மீது வரி 40 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. வார்ப்புகளுக்கு பயன்படுத்தப்படும் போரிக் ஆசிட் மற்றும் பைண்டர்கள் மீது வரி 7.5 சதவீதமாகவும், ஆர்டீமியா எனப்படும் ஒரு வகை இறால்களுக்கு வரி 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இரும்பு, ஸ்டீல் பொருட்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், அலாய் ஸ்டீல், டியூப், பைப் பிட்டிங்குகள், ஸ்குரூ, போல்ட், ரிவிட் மற்றும் ஆப்பிள், பியர்ஸ் பழங்கள் உட்பட 29 வகை பொருட்கள் மீது வரி உயர்த்தப்பட்டுள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  இதுதவிர, ஸ்டீல், அலுமினியம் பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்தது தொடர்பாக, உலக வர்த்தக அமைப்பில் இந்தியா முறையீடு செய்துள்ளது.

இந்தியா பதிலடி; நாளை அமலாகிறது

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் 150 கோடி டாலர் மதிப்பிலான  ஸ்டீல், அலுமினியம் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.

*  2017-18 நிதியாண்டில் இந்தியாவில் இருந்து  அமெரிக்காவுக்கு 479 கோடி டாலர் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. இறக்குமதி 267 கோடி டாலராக உள்ளது.

*  அதிகபட்சமாக அக்ரூட்டுக்கு வரி 30 சதவீதத்தில் இருந்து 120 சதவீதமாக உயர்ந்துள்ளது.

*  கொண்டைக்கடலை, மசூர் பருப்பு மீது வரி 30 சதவீதத்தில் இருந்து 70 சதவீதம் ஆகியுள்ளது.

*  போரிக் ஆசிட், வார்ப்புகளுக்கான பைண்டர்கள் மீது வரி 7.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

*  இதுதவிர, ஆப்பிள், பியர்ஸ் பழங்கள், டியூப், பைப் பிட்டிங் மீதான வரியும் உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories: