ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் : ஈரானே காரணம் என அமெரிக்கா குற்றச்சாட்டு

வாஷிங்டன் : ஓமன் வளைகுடாவில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 2 எண்ணெய் கப்பல்கள் பற்றி எரிந்து வருவது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு ஈரானே காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. நார்வே நிறுவனத்திற்கு சொந்தமான front altair ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான kokuka courageous ஆகிய 2 எண்ணெய் கப்பல்கள் ஓமன் வளைகுடாவில் தாக்குதலுக்கு உள்ளாகின.

Advertising
Advertising

தாக்குதலுக்கு உள்ளான 2 கப்பல்களும் நடுக்கடலில் பற்றி எரிந்து வருகின்றன. 2 கப்பல்களில் இருந்து 44 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் .எண்ணெய் கப்பல் மீதான தாக்குதலை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதே பகுதியில் கடந்த மே மாதம் சவுதிக்கு சொந்தமான 2 எண்ணெய் கப்பல்கள் உட்பட 4 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த தாக்குதலின் பின்னணியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈரான் இருப்பதாக சவூதி அரேபியாவும் அமெரிக்காவும் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த தாக்குதல்கள் எப்படி நிகழ்த்தப்பட்டன என்பது குறித்த தெளிவான விவரங்கள் தெரியாத நிலையில், கடற்பரப்பில் பயன்படுத்தப்படும் கண்ணி வெடிகள் அல்லது நீர்மூழ்கிக் குண்டுகள்  மூலம் நிகழ்த்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம், இத்தகைய தாக்குதல்களை நிகழ்த்துவதற்கு தேவைப்படும் திறன், கப்பல்கள் மீதும் ஏற்கனவே நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதல்கள் மற்றும் உளவுத் தகவல்களின் அடிப்படையில் பார்க்கும் போது ஈரான் தான் தாக்குதல் நிகழ்த்தி இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். மேலும் கடலில் வெடிக்காத கண்ணி வெடிகளை ஈரான் ராணுவத்தினர் அகற்றுவது போன்ற வீடியோ ஒன்றையும் அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது. இதனிடையே அமெரிக்காவின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள ஈரான், ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளை அமெரிக்கா கூறுவதாக கண்டனம் தெரிவித்துள்ளது.  

Related Stories: