மத்திய அரசுக்கு பரபரப்பு கடிதம் சமையல் காஸ் சிலிண்டருக்கு கட்டாய டெலிவரி கட்டணம்: ஆண்டுக்கு ரூ.60,000 கோடி கொள்ளை என புகார்

சேலம்: வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்வதற்கு கட்டணம் என்ற பெயரில்  கொள்ளை நடந்து வருவதாக நுகர்வோர் அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன. வீட்டு உபயோகத்துக்கான காஸ் சிலிண்டர், ஆண்டுக்கு 12 எண்ணிக்கையில் மானிய விலையில் வழங்கப்படுகிறது. மானியம் வங்கிக் கணக்குக்கு நேரடியாக வந்து விடுகிறது.

Advertising
Advertising

சிலிண்டர் ஏஜென்சிகள் மூலம் வீடுகளுக்கு சிலிண்டர் கொண்டு வருபவர்கள் டெலிவரி கட்டணம் என்கிற முறையில் கட்டாய வசூல் செய்கின்றனர். ஏஜென்சியில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் டெலிவரி செய்தாலும் இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசு காஸ் சிலிண்டருக்கு வழங்கும் மானியத்தில் கால் பங்கு இதற்கே போய்விடுகிறது.

இதுகுறித்து கேட்டால், அரசு மானிய தொகையில்தானே கொடுக்கிறீர்கள் என்கிறார்கள். ஆனால் அரசு மானியத்தில் கால்பங்கை ஏஜெண்டுகளே டெலிவரி கட்டணம் என்ற போர்வையில் கொள்ளை அடிக்கின்றனர் என்று நுகர்வோர் அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன. இது குறித்து பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

100 கோடி குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு சிலிண்டருக்கு டெலிவரி கட்டணம் குறைந்தபட்சம் ரூ.50 என கணக்கிட்டால், மாதம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் கோடியை ஏஜென்டுகள் கொள்ளை அடிக்கின்றனர். இந்த கொள்ளை ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி என நீள்கிறது. இதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். சிலிண்டர்களை டெலிவரி செய்ய போக்குவரத்து கட்டணம், சிலிண்டர்களை இருப்பு வைக்க குடோன் கட்டணம் என அரசே தனியாக வழங்குகிறது.

நுகர்வோருக்காக அளிக்கப்படும் மானியம் முழுமையாக நுகர்வோருக்கு கிடைக்க உறுதி அரசு உறுதி செய்ய வேண்டும். டெலிவரி கட்டணத்தை நுகர்வோர் இருப்பிடத்தின் தூரத்திற்கேற்ப நியாயமாக நிர்ணயிக்க வேண்டும். இதுதவிர நுகர்வோர் அவர்களாக சிலிண்டர்களை டெலிவரி எடுத்துக்கொள்ள விரும்பினாலும், எவ்வித டெலிவரி கட்டணமின்றி அவர்ளுக்கு டெலிவரி வழங்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதனால் பகல் கொள்ளை பெருமளவு குறையும் என கூறப்பட்டுள்ளது.

புகார் செய்தால் நடவடிக்கை:

சென்னை உட்பட தமிழகம் எங்கும் பல இடங்களில் சிலிண்டர் டெலிவரி செய்பவர்கள் ரூ.50 வரை கட்டாய வசூல் செய்கின்றனர். காசு கொடுத்தால்தான் சிலிண்டர் தருகின்றனர். இல்லாவிட்டால் திரும்ப எடுத்துச்சென்று விடுகின்றனர். ஏஜென்சிகள் தூண்டுதலுடன் இது நடப்பதால், புகார் செய்தாலும் ஏஜென்சிகள் கண்டு கொள்வதே இல்லை என நுகர்வோர் புலம்புகின்றனர். டெலிவரி செய்பவர்கள் கட்டணம் கேட்டால் புகார் தரலாம். அதன் அடிப்படையில் ஏஜென்சி மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

Related Stories: