அதிமுக ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு இல்லை அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பொறுத்திருந்து முடிவு எடுப்போம் ;2 எம்எல்ஏக்கள் பரபரப்பு பேட்டி

புதுக்கோட்டை: அதிமுக ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு அனுப்பப்படாததால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பொறுத்திருந்து முடிவு எடுப்போம் என அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி  கூறியுள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக  தலைமையகத்தில்  நேற்று காலை கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.  சபாநாயகரால் ஏற்கனவே  நோட்டீஸ் அனுப்பப்பட்ட அறந்தாங்கி ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய   எம்எல்ஏக்களுக்கு இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்படவில்லை. அதிமுக  அழைக்காதது பற்றி அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி அளித்த பேட்டி: எங்களுக்கு அதிமுகவிலிருந்து அழைப்பு வரும் என சென்னையில் காத்திருந்தோம்.  ஆனால் எங்களை அழைக்கவில்லை. நாங்களும் அதிமுக தொண்டர்கள்  தான். அனைத்து  தொண்டர்களையும் தலைமை அரவணைத்து போக வேண்டும்.  எனக்கும்,  டிடிவி.தினகரனுக்கும் அரசியல் ரீதியாக எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் தேவையில்லை  என்று முடிவு செய்துவிட்டார்களா என தெரியவில்லை.

Advertising
Advertising

 அதிமுக  தொண்டர்கள் அனைவரையும் அழைத்து பொதுக்குழுவை கூட்டி ஒற்றை தலைவரை  தேர்ந்தெடுக்க வேண்டும். சட்டமன்றத்தில் நம்பிக்கை  வாக்கெடுப்பு நடத்தினால், எங்களிடம் ஆதரவு கேட்டால் அப்போது முடிவு  எடுப்போம்.   பெரும்பான்மையான உறுப்பினர்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ  அவருக்கு நானும் ஆதரவு அளிப்பேன். இப்போது எதுவும் சொல்ல முடியாது.  அடுத்து என்ன செய்வதென்று பொறுத்திருந்து ஆராய்ந்து முடிவு எடுப்போம். இவ்வாறு அவர்  கூறினார்.கலைச்செல்வன் பேட்டி: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் நேற்று அளித்த பேட்டி: ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என்று பெயரளவில் தொலைக்காட்சி வாயிலாக கூறுகிறார்களே தவிர, உண்மையான நிகழ்வாக  தெரியவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற கேள்விப்படாத பொறுப்புகளை முடிவு செய்திருக்கிறார்கள்.  அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும், அது நிச்சயமாக ஒற்றை தலைமையாகத்தான் இருக்க வேண்டும்.  அது இப்போது இருக்கிறவர்கள் தான் என்பது இல்லை. புதிதாக கூட வரலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: