தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக வேண்டும் என ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியது தவறு: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: பொதுச்செயலாளர் பதவி வழங்கக் கோரி போஸ்டர் ஒட்டப்பட்டது தவறு எனவும், தற்போதுள்ள அதிமுக தலைமையை ஏற்று செயல்படுவேன் எனவும்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் தனியார் பள்ளிகள் அஞ்சும் வகையில், தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது எனவும் கூறினார்.  பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவி குறித்து எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இரட்டை தலைமையே தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, அமைச்சர் செங்கோட்டையன் பொதுச்செயலாளராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. முன்னதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருக என்று அதிமுக தலைமையகம் அருகில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், போஸ்டர் விவாகரம் குறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்ட போது, தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக வேண்டும் என ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியது தவறு என தெரிவித்தார். மேலும் கட்சி தலைமைக்கு உயிருள்ளவரை உறுதுணையாக இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: