அதிமுக கூட்டம் நிறைவு... ஒற்றை தலைமை பற்றி விவாதிக்கவில்லை... உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை

சென்னை: பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் தொடங்கிய கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. இந்த கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் உள்ளாட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கட்சி பிரச்சினைகளை பொதுவெளியில் அதிமுக நிர்வாகிகள் பேசக்கூடாது என்றும் கூட்டத்தில் அறிவுரை வழங்கியுள்ளது. கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை தனித்தனியே கேட்டறிய அதிமுக தலைமை ஏற்பாடு செய்யும் என்று கூட்டத்தில் உறுதியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மட்டுமே பேசினர்.

வேறு யாரும் பேச அனுமதிக்கவில்லை. தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். அதிமுகவுக்கு இரட்டை தலைமை தேவையில்லை, ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

அமைச்சர் சி.வி.சண்முகமும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் தான் அதிமுக தோல்வி அடைந்தது என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. இதில் உள்ளாட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தோல்வி குறித்தும் விவாதிக்கப்பட்டது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் ஒன்றரை மணி நேரத்தில் முடிவடைந்துள்ளது. கூட்டம் முடிந்து வெளியே வந்த ராஜன் செல்லப்பா செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கருத்து கூற மறுத்துவிட்டார்.

பொதுச்செயலாளர் எடப்பாடி

அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே என்று அதிமுக தலைமையகம் அருகில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர் செங்கோட்டையன்


அமைச்சர் செங்கோட்டையன் பொதுச்செயலாளராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு இல்லை

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், பிரபு மற்றும் இரத்தினசபாபதி ஆகியோருக்கு அழைப்புவிடுக்கவில்லை. அழைப்பு வராததால் பங்கேற்கவில்லை என எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு விளக்கம் அளித்துள்ளனர்.

ஆர்.டி.ராமச்சந்திரன் பங்கேற்கவில்லை

சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் குன்னம் எம்எல்ஏ-வுமான ஆர்.டி.ராமச்சந்திரன். பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தான் உடல் நடல்நலக்குறைவால் கேரளா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை  என்று தெரிவித்துள்ளனர்.


Tags : meeting ,AIADMK ,elections , AIADMK, District Secretaries Meeting, Royapettah, General Secretary, Edattadi Palinasamy, Posters, O.Panniriselvam
× RELATED அதிமுக பொதுக்கூட்டம்